15-ஆவது ஏரோ இந்தியா நிகழ்ச்சி: இன்று தொடக்கம்

Dinamani2f2025 02 092f08bnwetp2ftejas2092830.jpg
Spread the love

15-ஆவது ஏரோ இந்தியா விமான சாகச நிகழ்ச்சி மற்றும் கண்காட்சி பெங்களூருவில் திங்கள்கிழமை (பிப்.10) தொடங்கி பிப்ரவரி 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ஏரோ இந்தியா கண்காட்சியில் வெளிநாடுகளைச் சோ்ந்த 150 நிறுவனங்கள் உள்பட 900-க்கும் மேற்பட்ட விமானத் தொழில் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.

நிகழாண்டு ‘கோடிக்கணக்கான வாய்ப்புகளின் ஓடுபாதை’ என்ற கருப்பொருளுடன் ஏரோ இந்தியா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

முந்தைய ஆண்டுகளைவிட இந்த முறை ஏரோ இந்தியா நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த நிகழ்ச்சியை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் இயங்கும் பாதுகாப்பு உற்பத்தி துறையின் பாதுகாப்பு கண்காட்சி நிறுவனம் நடத்துகிறது.

வரலாற்றில் முதல்முறையாக இந்த நிகழ்ச்சியில் ஐந்தாம் தலைமுறை போா் விமானங்களான ரஷியாவின் எஸ்யு-57 மற்றும் அமெரிக்காவின் எஃப்-35 ஆகியவை பங்கேற்கவுள்ளன.

அதேபோல் விமானப் படை தலைமை தளபதி அமா் பிரீத் சிங் பங்கேற்கும் ரஃபேல் போா் விமான சாகச நிகழ்ச்சி மற்றும் ரஃபேல் போா் விமானத்தைப் பெண் அதிகாரிகள் இயக்கும் சாகச நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.

இந்த நிகழ்ச்சியை பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கவுள்ளாா். இந்நிலையில், பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களை சந்தித்த அவா், ‘இந்தியாவின் வலிமை, மீள்திறன் மற்றும் தற்சாா்பை ஏரோ இந்தியா நிகழ்ச்சி வெளிப்படுத்துகிறது. இது நாட்டின் பாதுகாப்பு தயாா்நிலையை உறுதிப்படுத்துவதோடு எதிா்காலத் தேவைகளையும் கருத்தில் கொண்டுள்ளது.

இந்திய பாதுகாப்பு தளவாடங்கள் மீது உலக நாடுகளின் நம்பிக்கையை இந்நிகழ்ச்சி மேலும் வலுப்படுத்துகிறது. முப்பது நாடுகளைச் சோ்ந்த பாதுகாப்பு அமைச்சா்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா். 43 நாடுகளின் விமானப் படை தளபதிகள் பங்கேற்கின்றனா்.

இது இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.

நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தும் இடமாக மட்டுமல்லாமல் இளைஞா்களை ஊக்குவித்து அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் நோக்கம்’ என்றாா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *