ஐபிஎல் தொடரின் 8வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் சேப்பாக்கம் திடலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை அணியை பெங்களூரு வீழ்த்தியுள்ளது.
சிஎஸ்கேவின் கோட்டையாகத் திகழ்ந்துவந்த சேப்பாக்கத்தில் தனது தொடர்ச்சியான தோல்விகளுக்கு ஆர்சிபி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
கடைசியாக 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டபோது சென்னை சேப்பாக்கம் திடலில் சிஎஸ்கேவை பெங்களூரு வீழ்த்தியிருந்த நிலையில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற 8வது ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பில் சால்ட் அதிரடியாக ஆட, விராட் கோலி நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். கோலி 30 பந்துகளுக்கு 31 ரன்கள் எடுத்த நிலையில், பில் சால்ட் 16 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் ஜோடி சேர்ந்தனர். படிக்கல் வந்த வேகத்தில் தனது அதிரடியைத் தொடங்கினார். அவர் 14 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பின், களமிறங்கிய கேப்டன் ரஜத் படிதாரும் அதிரடியைத் தொடர்ந்தார். விராட்கோலிக்கு பிறகு களமிறங்கிய லியம் லிவிங்ஸ்டன் 10 ரன்கள், ஜித்தேஷ் சர்மா 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய கேப்டன் ரஜத் படிதார் 32 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்களைக் குவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரச்சின் ரவீந்திரா – ராகுல் திரிபாதி இணை தடுமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது.
அதன் பிறகு வந்த ருதுராஜ் கெய்க்வாட்டும் அதிர்ச்சி அளித்து ரன்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். ரச்சின் ரவீந்திரா நம்பிக்கை அளிக்கும் ஆட்டத்தை தொடர்ந்துவந்தபோது, தீபக் ஹூடா, சாம் கரண் ஆகியோர் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். இதனால் சென்னை அணியின் வெற்றி வாய்ப்பு மெல்ல மெல்ல பெங்களூரு பக்கம் சாய்ந்தது.