471 நாட்களுக்குப் பின் ஜாமீனில் விடுதலையானார் செந்தில் பாலாஜி – திமுகவினர் உற்சாக வரவேற்பு | Senthil Balaji came out after 471 days of imprisonment!

1317205.jpg
Spread the love

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, 471 நாட்களுக்குப் பிறகு புழல் சிறையில் இருந்து வியாழக்கிழமை இரவு 7.10 மணிக்கு சிரித்த முகத்துடன் அவர் வெளியே வந்தார். சிறையின் வெளியே காத்திருத்த திமுக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வழக்கு என்ன? – கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி மீது அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றியதாக 3 மோசடி வழக்குகளை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்குகளின் அடிப்படையில் அவர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். ஆகஸ்ட் மாதம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

தீர்ப்பு ஒத்திவைப்பு: ஏற்கெனவே செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனிடையே, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 61 முறை நீட்டிக்கப்பட்டது. ஜாமீன் கோரிய வழக்கில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு தீர்ப்புக்காக இந்த வழக்கை கடந்த ஆக.12ம் தேதி ஒத்திவைத்திருந்தனர்.

நிபந்தனைகளுடன் ஜாமீன்: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் இன்று (செப்.26) ஜாமீன் வழங்கியது. திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகி கையெழுத்திட வேண்டும். சாட்சிகளை கலைக்கவோ, அவர்களை சந்தித்துப் பேசவோ எவ்வித முயற்சியும் மேற்கொள்ளக்கூடாது. ரூ.25 லட்சத்துக்கு இருநபர் உத்தரவாதம் வழங்க வேண்டும், உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது.

பிணை உத்தரவாத குழப்பம்: இதைத் தொடர்ந்து, ஜாமீன் உத்தரவாதங்களை எங்கு தாக்கல் செய்வது என்ற விவரங்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்படாததால் குழப்பம் ஏற்பட்ட நிலையில், செந்தில் பாலாஜியின் உறவினர்களான தியாகராஜன், சிவப்பிரகாசம் ஆகியோரது உத்தரவாதங்களை ஏற்று, செந்தில் பாலாஜியை விடுதலை செய்ய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

புழல் சிறையில் தொண்டர்கள் உற்சாகம்: செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம், இன்று காலை ஜாமீன் வழங்கியதில் இருந்தே, புழல் சிறையில் திமுக தொண்டர்கள் திரண்டனர். மேலும், கரூரில் திமுக தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும், செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்தனர். புழல் சிறையின் வெளியே, திமுக தொண்டர்கள் காலை முதல் இரவு வரை செந்தில் பாலாஜியின் வருகைக்காக கையில் கொடிகளை ஏந்தியபடி காத்திருந்தனர். பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும்,கொட்டு மேளங்களை இசைத்தபடி, பல மணி நேரம் தொண்டர்கள் சிறை வளாகத்திலேயே காத்திருந்தனர்.

சிரித்த முகத்துடன் வெளியே வந்தார்: புழல் சிறையில் இருந்து சிரித்த முகத்துடன் வெளியே வந்தார். சிறைச்சாலையின் வெளியே காத்திருந்த திமுக தொண்டர்கள் அவருக்கு மலர்களைத் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். செந்தில் பாலாஜியை வாழ்த்தி முழக்கங்களை எழுப்பினர். சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜிக்கு திமுக துண்டு அணிவிக்கப்பட்டது. செந்தில் பாலாஜியை வரவேற்க திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் சென்றிருந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *