Motor Vikatan – 01 February 2026 – Editor Page|ஆசிரியர் பக்கம்

Spread the love

கார் பிரியர்களுக்குக் கோலாகலமாக மலர்ந்திருக்கிறது 2026. மஹிந்திரா XEV 9e, மஹிந்திரா XUV 7XO, ஸ்கோடா குஷாக், டொயோட்டா eபெல்லா (மாருதி சுஸூகி eVitara-வின் டொயோட்டா வெர்ஷன்), ரெனோ டஸ்ட்டர் போன்ற கார்கள் துவங்கி ஸ்கோடா, ஃபோக்ஸ்வாகன், மெர்சிடீஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ ஆகிய கார் கம்பெனிகளும் ஒன்றன் பின் ஒன்றாக பல கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கின்றன. பஜாஜ், இந்த ஆண்டுக்கான தனது கணக்கைத் தொடங்கிவிட்ட நிலையில், மற்ற இருசக்கர வாகனக் கம்பெனிகள் புது அறிமுகங்களோடு சுறுசுறுப்பாகி வருகின்றன.

புதுக் கார்கள் மட்டும் அறிமுகமாகவில்லை. புதுப் புது தொழில்நுட்பங்களையும் தினம் தினம் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றன ஆட்டோமொபைல் கம்பெனிகள். அதிலும் குறிப்பாக தனது XUV 7XO காரில் மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கும் DaVinci dampers தொழில்நுட்பம் வாடிக்கையாளர்களின் அனுபவங்களை மேம்படுத்தி இருக்கிறது.

முன்பதிவு ஆரம்பமான முதல் நாளிலேயே டாடா சியராவுக்கு 70,000 முன்பதிவுகள் வந்ததும், மஹிந்திராவின் XEV 9s மற்றும் XUV 7XO கார்களுக்கு 90,000-த்துக்கும் மேற்பட்ட முன்பதிவுகள் வந்ததும் வாடிக்கையாளர்களின் எழுச்சிக்குச் சான்றாக விளங்குகின்றன. விலை உயர்ந்த கார்களில் இருக்கும் தொழில்நுட்பங்களை, வணிக நுட்பத்தின் துணை கொண்டு நடுத்தரக் கார்களிலும் கொடுக்க முடியும் என்பதை மஹிந்திராவின் கார்கள் நிரூபித்து வருகின்றன.

அந்த வகையில் பெரிய ஆல் வீல் டிரைவ் கார்களின் வல்லமையை, ஃப்ரன்ட் வீல் டிரைவ் கொண்ட சப்-காம்பேக்ட் எஸ்யூவிகளிலும் கொடுக்க முடியும் என்று டாடா மோட்டார்ஸ் நிரூபித்திருக்கிறது. ஒரு காலத்தில் செல்வந்தர்கள் மற்றும் அதிகாரமிக்கவர்கள் ஆகியோரிடம் மட்டுமே இருந்த தொலைபேசி, இப்போது அனைவரையும் வந்து சேர்ந்திருப்பதைப்போல அதிக விலை கொண்ட கார்களில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்களும் வசதிகளும், நடுத்தர மக்கள் பயன்படுத்தும் கார்களுக்கும் வந்து கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது.

– ஆசிரியர்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *