சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்துக்கு விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பொழியும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. இந்த சூழலில் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. புயல் கரையை கடக்கும் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 70+ கிலோ மீட்டருக்கு மேல் பல இடங்களில் வீசி வருகிறது.
குறிப்பாக புயல் கரையை கடக்கும் பகுதியான செய்யூர், மரக்காணம், புதுச்சேரியில் பலத்த மழை பொழிந்து வருகிறது. இந்த சூழலில் இந்திய வானிலை ஆய்வு மையம் இரவு 10.30 மணி அளவில் வெளியிட்ட அறிக்கையில் ஃபெஞ்சல் புயல் புதுச்சேரிக்கு 30 கிலோ மீட்டர் வடகிழக்கிலும், மகாபலிபுரத்துக்கு தெற்கே 50 கிலோ மீட்டர் தென்மேற்கிலும், சென்னைக்கு 90 கிலோ மீட்டர் தென்மேற்கிலும் நிலை கொண்டுள்ளது. புயல் தொடர்ந்து தென்மேற்கு பக்கமாக நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 2 மணி நேரத்தில் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழையை பொறுத்தவரையில் இரவு 1 மணி வரை விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பொழியும் என இரவு 10 மணிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதியிலும் மிதமான மழை பொழிய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.