அஜித்குமார் மீது திருட்டு புகார் கூறிய பேராசிரியை நிகிதா, தாயாரிடம் சிபிஐ விசாரணை! | Ajithkumar Case: Nikitha, her mother appears before CBI

1370623
Spread the love

மதுரை: போலீஸ் தாக்கியதில் மரணமடைந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்த கல்லூரி பேராசிரியை நிகிதா, அவரது தாயாரிடம் மதுரையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

திருமங்கலம் கல்லூரி பேராசிரியை நிகிதா, அவரது தாயார் சிவகாமியம்மாள் ஆகியோர் கடந்த ஜூன் 27-ம் தேதியன்று சிவகங்கை மடப்புரம் காளியம்மன் கோயிலுக்கு தரிசனத்துக்காக சென்றனர். அப்போது காரில் இருந்த நிகிதாவின் நகை காணாமல் போன புகார் தொடர்பாக கோயில் காவலாளி அஜித்குமாரை தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்று தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

இந்த வழக்கை டெல்லி சிபிஐ பிரிவு டிஎஸ்பி மோகித்குமார் தலைமையிலான குழுவினர் விசாரிக்கின்றனர். மடப்புரம் கோயில், திருப்புவனம் காவல் நிலையம், அரசு மருத்துவமனை என பல இடங்களிலும் நேரில் விசாரித்தனர். அஜித்குமார் மரணத்துக்கு முன்பு அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், கோயில் உதவி ஆணையரின் ஓட்டுநர் கார்த்திக்வேல், அஜித்குமாரின் நண்பர்கள் பிரவின்குமார், வினோத்குமார், அவரது தம்பி நவீன்குமார், தனிப்படை வாகன ஓட்டுநரான காவலர் ராமச்சந்திரன் ஆகியோரிடம் மதுரை ஆத்திகுளம் சிபிஐ அலுவலகத்தில் 18-ம் தேதி விசாரித்தனர்.

மேலும், இவ்வழக்கு குறித்து திருப்புவனம் அரசு மருத்துவர் கார்த்திகேயன், செவிலியர் சாந்தி, கோயில் அலுவலர்கள் ஆகிய 7 பேரிடமும் நேற்று மதுரை சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடந்தது. இதனிடையே, இச்சம்பவத்துக்கு முன்னதாக நகை திருடு போனதாக அஜித்குமார் மீது திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்த பேராசிரியை நிகிதா, அவரது தயார் சிவகாமி அம்மாள் ஆகியோரிடமும் விசாரிக்க, அவர்களுக்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் வழங்கினர்.

இதையடுத்து இன்று (வியாழக்கிழமை) மதியம் 2 மணிக்கு மேல் இருவரும் மதுரை ஆத்திகுளம் சிபிஐ அலுவலகத்திற்கு சிவப்பு நிற காரில் வந்து ஆஜராகினர். அவர்களிடம் டிஎஸ்பி மோகித்குமார் உள்ளிட்ட சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். புகாரின் உண்மைத் தன்மை, எந்த இடத்தில் நகையை காணவில்லை போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பி அதற்கான பதிலை பெற்றதாக தெரிகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *