அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணா: ஜி.கே.மணி வேதனை | PMK MLAs supporting Anbumani stage protest in the Assembly premises – G.K. Mani react

1379738
Spread the love

சென்னை: பாமக சட்டமன்றக் குழு தலைவர், துணைத் தலைவர், கொறாடாவாக தங்களை நியமிக்க சபாநாயகரை வலியுறுத்தி அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏக்கள் மூன்று பேர் சட்டப்பேரவை வளாகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் போராட்டம் மிகவும் துரதிருஷ்டவசமானது என ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, கேரள மாநில முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரன், நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் பீலா வெங்கடேசன், அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி ஆகியோருக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

முன்னதாக, சட்டப்பேரவைக்கு வருகை தந்த பாமகவின் அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் சிவகுமார் (மயிலம் தொகுதி), சதாசிவம் (மேட்டூர் தொகுதி), வெங்கடேஸ்வரன் (தருமபுரி தொகுதி) ஆகிய மூன்று பேரும் சட்டப்பேரவைக்குள் செல்லும் 4-ம் நுழைவு வாயில் முன் அமர்ந்து, பாமக சட்டமன்றக் குழு தலைவர், துணைத் தலைவர், கொறாடாவாக தங்களை நியமிக்க சபாநாயகரை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே. மணி, “சட்டப்பேரவையில் பாமக இரண்டு பிரிவுகளாக செயல்படுவது மிகவும் வருத்தமளிக்கும், அதிர்ச்சியான, ஒரு துரதிருஷ்டவமான சம்பவமாகப் பார்க்கிறோம். பாமகவை உருவாக்கியவர் ராமதாஸ். எந்தப் பதவியும் வகிக்காத ஒரு தலைவர் அவர். வன்னியர் சமூகம் உட்பட அனைத்து சமூக மக்களுக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக போராடுபவர் அவர்.

அகில இந்திய அளிலும், தமிழக அளவிலும் ஆறு இட ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொடுத்த ஒரு தலைவர் ராமதாஸ். பாமகவை ஒரு வலிமையான சக்தியாகக் கொண்டு வந்தவர் அவர். அவருடைய காலத்தில் பாமகவுக்கு இப்படி ஒரு சோதனை வந்திருப்பது எங்களுக்கு அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் இருக்கிறது.

அவருடன் 45 வருடங்களாக நான் பயணம் செய்கிறேன். அவர் போராடாத, குரல் கொடுக்காத பிரச்சினைகளே இல்லை. அப்படிப்பட்ட அவருக்கு, இப்படி ஒரு சோதனை வந்திருப்பது, துரதிருஷ்டவசமானது, வேதனையானது.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கிடில் நம் அனைவருக்கும் தாழ்வு, ஒற்றுமையே பலம். இது எல்லோருக்கும் பொருந்தும். அரசியல் கட்சிகளில் பிரச்சினைகள் வரும். எல்லா கட்சிகளிலும் பிரச்சினைகள் வரும். அது இயல்புதான். என்றாலும் கூட, ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே நல்ல விஷயம்.

பாமகவுக்கு 5 சட்டப்பேரவை உறுப்பினர்களை அவர்களுக்கான பொறுப்புகளை நியமித்துக் கொடுத்தவர் ராமதாஸ். அவர்தான் பாமகவை தொடங்கியவர், அவருக்குத்தான் முழு அதிகாரம் இருக்கிறது. அவரது வழியில்தான் நாங்கள் பயணிக்கிறோம்.” என தெரிவித்தார்.

பாமக சட்டமன்றக் குழு தலைவரை மாற்றக் கோரி 3 பாமக எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்துகிறார்களே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஜி.கே. மணி, “ஐந்து ஆண்டுகள் கொண்ட சட்டமன்றத்தின் பதவிக்காலம் இன்னும் கொஞ்ச காலத்தில் முடிவடையப் போகிறது. இதில்போய் என்ன பிரச்சினை ஏற்படப் போகிறது. ஒன்றும், நடக்கப்போவதில்லை. ஆனால், முழு அதிகாரம் கட்சியைத் தொடங்கிய ராமதாஸுக்குத்தான் உண்டு. அவரது நியமனம்தான் சரியானது என்பது எங்களது கருத்து. உண்மையும், தர்மமும், சத்தியமும், நியாயமும் அதுதான்.” என தெரிவித்தார்.

அவர்கள் சபாநாயகரை சந்தித்து மனு கொடுக்கிறார்கள், இது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறார்களே என்ற கேள்விக்கு, “அது அவர்கள் விருப்பம். அவர்கள் விருப்பப்படி செயல்படுகிறார்கள். அதில், நாம் எதுவும் குறை சொல்ல முடியாது. பாமக மக்களுக்காகப் போராடும். தற்போது பாமகவுக்குள் போராட்டம் என்பது வினோதமானது, துரதிருஷ்டவசமானது” என தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *