அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
முதல்வரின் காலை உணவு திட்டம், முதல் கட்டமாக 15.9.2022-இல் 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தொடங்கிவைக்கப்பட்டது. அதனால், 1.14 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றனர். இந்தத் திட்டத்துக்கு மக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதைத் தொடர்ந்து, 25.8.2023-இல் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில், முதல்வர் மு.க.ஸ்டாலினால் 30,992 அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் பயன் பெறும் வகையில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்ற அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் காமராஜர் பிறந்த நாளான திங்கள்கிழமை (ஜூலை 15) திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் தொடங்கிவைத்தார்.
அப்போது குழந்தைகளுக்கு உணவு பரிமாறியதுடன் அவர்களுக்கு உணவு ஊட்டியும் முதல்வர் மகிழ்ந்தார். தொடர்ந்து குழந்தைகளுடன் அமர்ந்து தானும் உணவு உண்டார். விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தத் திட்டத்தின் மூலம் 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2.23 லட்சம் மாணவர்கள் பயனடையவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.