‘ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர் போல செயல்படும் ஆளுநரை நீக்குக’ – மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல் | Remove R.N. Ravi from the post of Governor – CPI M party

1358096.jpg
Spread the love

சென்னை: “உயர்கல்வி நிலையங்களை அவற்றின் மதச்சார்பற்ற தன்மைக்கு மாறாக, இந்துத்துவ கூடமாக மாற்ற முயலும் ஆர்.என்.ரவியின் போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே, ஆளுநர் பொறுப்பிலிருந்து அவரை நீக்க வேண்டும்,” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின், அரசியல் சாசன மாண்புக்கு முரணான திட்டமிட்ட அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது உரையின் முடிவில் ஜெய் ஸ்ரீராம் என்று மூன்று முறை கூறியதோடு, மாணவர்களையும் கூறுமாறு நிர்பந்திந்துள்ளார்.

உயர்கல்வி நிலையங்களை அவற்றின் மதச்சார்பற்ற தன்மைக்கு மாறாக, இந்துத்துவ கூடமாக மாற்ற முயலும் ஆர்.என்.ரவியின் போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்டமுன்வரைவுகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காதது சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் ஓங்கி குட்டிய பின்பும், அரசியல் சாசனக் கடமைகளை மறுத்து ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர் போலவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

வள்ளலார், ஸ்ரீவைகுண்ட சாமிகள் உள்ளிட்ட சமூக சீர்திருத்த செம்மல்கள் மற்றும் திருவள்ளுவரை மனுவாதக் குடுவைக்குள் அடைக்க முயலும் இவர், மதச்சார்பின்மை, அறிவியல், பகுத்தறிவின் வாசல்களாகத் திகழ வேண்டிய கல்விக்கூடங்களை காவி கூடாரமாக மாற்ற முயல்வதை சகித்துக் கொள்ள முடியாது.ஆளுநர் என்ற மதச்சார்பற்ற அரசியல் சாசன உயர்பொறுப்பில் நீடிக்கும் தகுதி இவருக்கு சிறிதும் இல்லை என்பது தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது. எனவே, ஆளுநர் பொறுப்பிலிருந்து இவரை நீக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.” என்று அவர் கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *