மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலில் 14 வயது சிறுவன் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஆஸ்திரியாவின் வில்லாச் நகரத்தில் நேற்று (பிப்.15) சாலையில் சென்ற பொதுமக்கள் 5 பேர் மீது ஒருவர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் 14 வயதுடைய சிறுவன் ஒருவர் பலியாகியுள்ள நிலையில் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, சந்தேகப்படும்படியான நபர் ஒருவரை அந்நாட்டு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டவர் சிரியா நாட்டைச் சேர்ந்தவர் எனவும் அவர் சட்டப்பூர்வமாக ஆஸ்திரியாவில் குடியேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதில், தாக்குதலுக்கு உள்ளானோர் அனைவரும் ஆண்கள் என்று கூறப்படும் நிலையில், தாக்குதல் நடத்தியவரின் பின்புலம் குறித்த விசாரணை நடத்தி ஆதாரங்களை திரட்டி வருவதாக அந்நாட்டு காவல் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: மனிதனைக் காப்பாற்றி உயிரிழந்த குதிரைக்கு அரசு சார்பில் சிலை!
இந்நிலையில், பலியான சிறுவனின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ள கரிந்தியா மாகாண ஆளுநர் பீட்டர் கைசர், இந்த தாக்குதலுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்த வில்லாச் நகரத்தின் மத்தியப் பகுதியில் ஓர் மண்டலம் நிறுவப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும், இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து தற்போது வரை எந்தவொரு தகவலும் தெரியவராத சூழலில் கொலையாளி தனியாக செயல்பட்டாரா அல்லது வேறு யாருக்கேனும் இதில் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது.
முன்னதாக, ஆஸ்திரியா நாட்டினுள் குடியேறக்கோரி கடந்த 2024 ஆம் ஆண்டு சுமார் 24,341 வெளிநாட்டவர் விண்ணப்பித்துள்ளதாகவும் அதில் பெரும்பாலானோர் சிரியா நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.