இது விளையாட்டின் ஒரு பகுதி: தகுதிநீக்கம் குறித்து வினேஷ் போகத் கருத்து!

Dinamani2f2024 08 072fy2gk40lb2fvinesh20bhogat20edi.jpg
Spread the love

பாரீஸ் ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டது விளையாட்டின் ஒரு பகுதி என மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கருத்து தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் தங்கம் வென்று வரலாறு படைக்க இருந்த கனவு, தகுதி நீக்கத்தின் மூலம் தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தகுதி நீக்கம் குறித்து கருத்து தெரிவித்த வினேஷ் போகத், இது விளையாட்டின் ஒரு பகுதி என்று மட்டும் குறிப்பிட்டார்.

ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் பங்கேற்க இரவு முழுக்க உடல் எடையைக் குறைக்க உணவு, நீர் இன்றி கடுமையாக உடற்பயிற்சி செய்ததில், நீரிழப்பு ஏற்பட்டு, ஒலிம்பிக் வளாகத்திலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் வினேஷ் போகத்.

வினேஷை நேரில் சந்தித்த இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி. உஷா, அவர் உடல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் உறுதியாக உள்ளதாகவும், மனதளவில் மட்டும் சற்று அதிருப்தியில் இருப்பதாகவும் கூறினார்.

வினேஷ் போகத் உடன் இந்திய குழுவைச் சேர்ந்த உதவியாளர்கள் உள்ளனர்.

2024 ஒலிம்பிக் தொடரின் மகளிர் பிரிவு மல்யுத்தத்துக்கான இறுதிப்போட்டி இன்று (ஆக. 7) நடைபெற இருந்தது. இதில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத், அமெரிக்காவின் சாரா அன் ஹில்ட்பிரான்ட் உடன் மோத இருந்தார். இறுதிப்போட்டிக்கு 50 கிலோ எடையுடன் இருக்க வேண்டும்.

இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 52 கிலோ எடையில் இருந்ததால் அவர் உடனடியாக எடையைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இரவு முழுவதும் தொடர் ஓட்டம், சைக்கிளிங் என கடுமையாக உடற்பயிற்சி செய்து 1.9 கிலோ எடை குறைத்தார். 50 கிலோவுக்கு கூடுதலாக 100 கிராம் இருந்ததால், இறுதிப்போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இச்சம்பவம் இந்திய ஒலிம்பிக் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மல்யுத்தப் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் குறித்து விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் ஆறுதல் தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *