ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் விளையாட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் அலைஸ்டர் குக் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் முதல் டெஸ்ட்டில் ஆஸி.யை வீழ்த்தியது.
இங்கிலாந்தில் ஜெய்ஸ்வால் 700 ரன்கள் அடித்து அசத்தினார். தற்போது, ஆஸ்திரேலியாவுடனும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
இதுவரை ஜெய்ஸ்வால் 15 போட்டிகளில் 1,568 ரன்கள் குவித்துள்ளார்.
இங்கிலாந்துக்காக முதன்முதலாக 10,000 ரன்கள் எடுத்த டெஸ்ட் பேட்டராக அலைஸ்டர் குக் இருக்கிறார் . அவர் பார்டர் -கவாஸ்கர் குறித்து பேசியதாவது:
இந்தியாவின் தைரியம் பிடித்திருக்கிறது
இந்தியா மிகவும் தைரியமாக இருப்பதாக நான் நினைக்கிறேன். முதல் இன்னிங்ஸில் 150க்கு ஆல் அவுட் ஆகி ஆஸி. வெற்றி பெறும் என நினைக்கும்போது இந்தியர்கள் ‘நாங்கள் ஆஸியை வீழ்த்துவோம்’ என்பதுபோல் சிறப்பாக விளையாடினார்கள்.
இரு அணிகளுக்கு கடினமாகதான் இருந்திருக்கும். பல கேப்டனும் பந்துவீச்சைதான் தேர்ந்தெடுத்திருப்பார்கள். அதனால் மோசமான விளைவுகளையே சந்தித்திருப்பார்கள். ஆனால், இந்திய அணி சிறப்பாக கையாண்டது. இது முழுமையான சிறப்பான செயல்பாடுகளை கொண்டிருந்தது.
150 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அங்கிருந்து மீண்டு வருவதை யாரும் நினைத்து பார்த்திருக்கமாட்டார்கள். ஜஸ்ப்ரீத் பும்ரா புதிய பந்தில் அந்த மாதிரியான விக்கெட்டுகளை எடுத்து அணியை வழிநடத்தும்போது அனைவருக்கும் நம்பிக்கை பிறக்கிறது.
500 விக்கெட்டுகள் எடுத்த அஸ்வின் இல்லாமல் விளையாடினார்கள். எவ்வளவு தைரியம்? நானாக இருந்தாலும் அஸ்வினுடன் சென்றிருப்பேன். ஆனால், இந்தியாவின் முடிவு மிகச்சிறப்பாக இருந்தது.
ஸ்டார்க்கிடம் அப்படி பேசியிருக்க வேண்டியதில்லை
ஆஸி. இப்படி தோற்கும்போது பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது. ஜெய்ஸ்வால் மிட்செல் ஸ்டார்க்கிடம் பந்து மெதுவாக வருகிறதென கிண்டல் செய்கிறார். சதமோ, மிகப்பெரிய ரன்களோ அடிக்காமல் அப்படி சொல்லியிருக்கிறார். நான் ஸ்டார்க்கிடம் விளையாடியுள்ளேன். அவர் அவ்வளவு மெதுவாக வீசுவதில்லை.
நானாக இருந்தால் அமைதியாக விளையாடியிருப்பேன். 22 வயதில் இந்தளவுக்கு நம்பிக்கை இருப்பதை பார்க்க ஆச்சரியமாக இருந்தது.
ஆனால், ஸ்டார்க் அப்படியே வீசியிருந்தாலும் ஜெய்ஸ்வால் அவ்வாறு சொல்லியிருக்க வேண்டியதில்லை.
இங்கிலாந்தைவிட ஆஸி.க்கு எதிராக இப்படி ரன்களை குவித்து கொண்டாடுவதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
டாப் ஆர்டரில் விளையாடி 15 போட்டிகளில் அதிகமான ரன்களை குவித்துள்ளார். கிளாசிக்கலான வீரர் ஜெய்ஸ்வால். பெர்த்தில் விளையாடுவது கடினம். ஆனால், இந்தியா சிறப்பாக விளையாடியது. இது புதிய ஆடுகளகமாக இருந்தாலும் வரலாற்று சிறப்புமிக்க திடலில் ஆஸி.யை வீழ்த்துவது சாதாரணமில்லை என்றார்.