உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று(அக். 20) ஆர்.ஜே. சங்கரா கண் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் காஞ்சி காமகோடி பீடத்தின் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், “இறைவன் அருளால் மோடியைப் போல் நல்ல தலைவர்கள் நம்மிடையே உள்ளனர். இறைவன் பல்வேறு மகத்தான செயல்களை பிரதமர் மோடியின் மூலம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.
நம் தேசம் பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டுகிறது. நாட்டுக்கு வலிமையான தலைமை இருப்பதே இதற்கானதொரு முக்கியக் காரணம்” என்று பிரதமர் மோடியை வெகுவாகப் பாராட்டி புகழ்ந்துள்ளார்.
ஆங்கிலத்தில் ’என்டிஏ’ என்றழைக்கப்படும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கான புதியதொரு அர்த்தத்தையும் அவர் விளக்கியுள்ளார். அதன்படி என்டிஏ என்பது ‘நரேந்திர தாமோதர்தாஸின் அனுஷாஷன்’ – அதாவது பாதுகாப்பு, வசதி மற்றும் மக்களின் நலன் சார்ந்ததொரு நல்ல நிர்வாகம் என்பதாகும்.
அவர் மேலும் பேசியதாவது, “சாமானிய மனிதன் ஒருவன் எதிர்கொள்ளும் சவால்களை புரிந்துகொள்பவர் பிரதமர் மோடி. இதன் காரணமாக, அவற்றை களைய வேண்டுமென்கிற நோக்கத்தில் அவர் உழைக்கிறார்.
என்டிஏ அரசு, மக்களுக்காக கடமையுணர்வுடன் செயலாற்றுகிறது. அதற்கான சிறந்த உதாரணமாக, கரோனா பெருந்தொற்று காலத்தில் ‘பிரதமர் கரீப் கல்யான் அன்ன யோஜனா திட்டம்’ செயல்படுத்தப்பட்டுள்ளதை சுட்டிகாட்டியுள்ளார். அதன்படி, எந்தவொரு நபரும் பசியால் பரிதவிக்கக்கூடாதென ஒவ்வொருவருக்கும் அரசு உணவளித்துள்ளதாக குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.