ஈஷா யோகா மையத்தின் சிவராத்திரி விழாவுக்கு எதிரான வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி | HC dismisses case against Isha Yoga Center Shivaratri festival

1352019.jpg
Spread the love

சென்னை: ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவால் இயற்கை வனச்சூழல் பாதிக்கப்படுவதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த எஸ்.டி.சிவஞானன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மகா சிவராத்திரி விழா நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கான பொதுமக்கள் ஈஷா யோகா மையத்துக்கு வருகின்றனர். இந்த நிகழ்வால் வெள்ளியங்கிரி மலையின் இயற்கை வனச்சூழல் கடுமையாக பாதிப்படைந்து வருகிறது.கடந்த ஆண்டுகளில் ஈஷா யோகா மைய சிவராத்திரி விழாவில் பங்கேற்க 7 லட்சம் பேருக்கு மேல் திரண்டதால் ஏற்பட்ட கழிவுநீர் வனப்பகுதிகளை மட்டுமின்றி, அருகில் உள்ள விவசாய நிலங்களையும் பாழ்படுத்தியுள்ளது.

விடிய, விடிய நடைபெறும் நிகழ்வில் அரசு நிர்ணயம் செய்துள்ள 45 டெசிபல் ஒலி அளவை விட விதிகளை மீறி அதிகப்படியான ஒலி மாசு ஏற்படுத்தப்படுகிறது. எனவே, ஈஷா யோகா மையத்தில் முறையான கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகளை செய்ய உத்தரவிட வேண்டும். மேலும் வனச்சூழலை பாதிக்கும் வகையிலும், ஒலி, ஒளி மாசு ஏற்படுத்தும் வகையிலும் சிவராத்திரி விழாவை நடத்தக்கூடாது என ஈஷா யோகா மையத்துக்கு உத்தரவிட வேண்டும்,” எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், “ஈஷாவில் மகாசிவராத்திரி விழாவின் போது அனைத்து சட்ட விதிகளும் பின்பற்றப்படுகிறது. ஈஷாவில் முறையான கழிவுநீர் சுத்திகரிப்புக்காக மூன்று புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. விதிகள் அமல்படுத்தப்படுவதை மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து கண்காணிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது மனுதாரர் தரப்பில், “விதிகளை மீறி இரவு நேரங்களில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் ஒலிமாசு ஏற்படுத்தப்படுகிறது. சிவராத்திரி நிகழ்ச்சிக்கு 7 லட்சம் மக்கள் வருகை தரும் நிலையில் இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் போதுமானவை அல்ல” என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது ஈஷா தரப்பில், “ஈஷா வளாகத்தில் உள்ள கல்வி நிறுவன கட்டிடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் 70 ஏக்கர் நிலத்தில் தான் விழா நடக்கிறது. சரவணம்பட்டியில் வசிக்கும் மனுதாரர் எப்போதெல்லாம் சிவராத்திரி விழா வருகிறதோ அப்போதெல்லாம் பக்கத்து நிலத்துக்காரர் ஆகிவிடுகிறார்,” என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஒலி மாசை கட்டுப்படுத்தவும், கழிவு நீர் சுத்திகரிப்புக்கும் போதுமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது வெறும் அச்சத்தின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் எந்த காரணமும் இல்லை எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *