ஒடிசாவின் பாலாசோரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, “கடந்த ஒரு வருடமாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. அவரால் எந்த ஒரு வேலையையும் சுயமாக செய்ய முடியாது என அவரோடு பணியாற்றுபவர்கள் கூறுகிறார்கள்.
சதி-கமிட்டி
இதற்குப் பின்னால் சதி இருக்குமோ என்றும் அவர்கள் சந்தேகிக்கிறார்கள். ஒடிசாவில் பாஜக வெற்றி பெற்றதும், ஒடிசாவைச் சேர்ந்த ஒருவரை நாங்கள் மாநிலத்தின் முதல்வராக்குவோம். அடுத்ததாக, நவீன் பட்நாயக்கின் உடல்நிலை குறித்து விசாரணை மேற்கொள்ள ஜூன் 10-க் குப் பிறகு ஒரு குழு அமைக்கப்படும்.
அந்தக் குழுவின் அறிக்கை பொதுமக்கள் முன்னிலையில் வெளியிடப்படும்“ என்று தெரிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் நவீன் பட்நாயக் இன்று(29ந்தேதி) நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
நவீன் பட்நாயக் பதில்
எனது உடல்நிலை குறித்து பிரதமர் மோடி மிகவும் அக்கறை கொண்டிருந்தால், பொதுவெளியில் அவர் பேசுவதற்கு முன்னால், நல்ல நண்பரான எனக்கு போன் செய்து எனது விசாரித்திருக்கலாம். கடந்த 10 ஆண்டுகளாக எனது உடல்நிலை குறித்து ஒடிசாவில் இருக்கும் பா.ஜ.க.வினரும், டெல்லியில் உள்ள பா.ஜ.க.வினரும் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
ஆனால், நான் பூரண ஆரோக்கியத்துடன் உள்ளேன். கடந்த ஒரு மாதமாக ஒடிசா மாநிலத்தில் பிரச்சாரம் செய்து வருகிறேன் என்பதை பிரதமர் மோடிக்கு நான் உறுதியளிக்கிறேன். பிரதமர் மோடி கமிட்டி அமைக்க விரும்பினால், எனது உடல்நிலை குறித்த வதந்திகளை பரப்புவோரை கண்டுபிடிக்க கமிட்டி அமைக்க வேண்டும் என நான் பரிந்துரைக்கிறேன்.
வதந்தி
பிரதமர் மோடி இதுபோன்ற வதந்திகளை நம்புவதற்கு பதிலாக, சிறப்பு அந்தஸ்து குறித்த ஒடிசாவின் கோரிக்கை மீது கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும். ஏனென்றால், அது ஒடிசா மக்களுக்கு உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் நவீன் பட்நாயக் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு உள்ள மற்றொரு வீடியோவல் கூறியிருப்பதாவது:-
மாநில அரசின் மகளிர் முன்னேற்ற திட்டங்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பு என்னை மகிழ்ச்சியடைய செய்கிறது. தற்போது ஒடிசா இளைஞர்கள் தன்னம்பிக்கையால் முன்னேறி செல்கின்றனர். இளைஞர்கள் சக்தியால் ஒடிசா நம்பர் ஒன் மாநிலமாக மாறும்.
தாக்கிப் பேசுவது வருத்தம்
வெளியே இருந்து வரும் சில அரசியல் தலைவர்கள் ஒடிசாவுக்கு வந்து என்னை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுவது வருத்தம் அளிக்கிறது. என்னை பற்றி மோசமான வார்த்தைகளினால் வேதனை தரும் கருத்துகளை தெரிவிக்கின்றனர். உங்களுக்கே தெரியும், நான் இதுவரை நான் யாரையும் மரியாதை குறைவாக நடத்தியதில்லை. பிறர் வருந்தும்படியான கருத்துகளை யாருக்கு எதிராகவும் பேசியதில்லை.
இழிவாக பேசிவருபவர்களுக்கு, அவர்கள் செய்யும் அவமரியாதைக்கு ஜூன் 1-ம் தேதி வாக்களிப்பதன் மூலம் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று பேசி உள்ளார்.