உடல் வெப்பத்தை கண்டறியும் டி-சர்ட் தயாரிப்பு: திருப்பூர் ஆடை வடிவமைப்பாளர் சோதனை முயற்சி | t-shirt product that detects body heat

1336223.jpg
Spread the love

திருப்பூர்: ஆடை அணிபவரின் உடல் வெப்பத்தைக் கண்டறியும் புதிய ரக டி-சர்ட்டை திருப்பூரைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் தயாரித்துள்ளார்.

திருப்பூர் அம்மாபாளையத்தைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் சொக்கலிங்கம், பின்னலாடைத் துறையில் பல்லாண்டு அனுபவம் மிக்கவர். தற்போது, உணர்திறன் மை பதிக்கப்பட்ட டி-சர்ட் தயாரிக்கும் சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து சொக்கலிங்கம் கூறியதாவது: உடல் வெப்பநிலை அதிகரிக்கும்போது டி-சர்ட்டில் உள்ள எழுத்துகள் மறையும். இதற்காக, தெர்மோ குரோமிக் முறையில், கொசுக்கள் அண்டாத வகையிலும், உடல் வெப்பத்தைக் கணிக்கும் வகையிலும் மை தயாரித்து, சோதனை முயற்சியாக டி-சர்ட் தயாரித்துள்ளேன். இந்த டி-சர்ட்டை பல்வேறு பரிசோதனைகளுக்கும் அனுப்பியுள்ளேன்.

இது மறு சுழற்சிக்கு உட்படுத்தக்கூடியது. எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாத இந்த ஆடையில், நம் உடல் வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட்டை அடையும்போது நிறம் மாறும். வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு கீழே குறைந்தவுடன் அசல் நிறத்துக்கு திரும்பும். இத்தகைய ஆடைகளை பருத்தி, பாலியெஸ்டர் என அனைத்து ரக துணிகளிலும் தயாரிக்க இயலும்.

விளையாட்டு வீரர்களுக்கு… இதேபோன்ற ஆடைகள் ஏற்கெனவே சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், குறிப்பிட்ட இடத்தில் மட்டும் சிப்வைக்கப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டதால், உடம்பின் முழு பகுதி வெப்பநிலையை அறிய முடியாது. ஆனால், நான் தயாரித்துள்ள இந்த ஆடைகள், விளையாட்டு வீரர்களுக்கு பொருத்தமானதாக இருக்கும். இதன் காப்புரிமை உள்ளிட்ட விஷயங்களை எதிர்காலத்தில் மேற்கொள்ள உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பூரை சேர்ந்த பின்னலாடை தொழில்துறையினர் கூறும்போது, “உடல் வெப்பநிலையை அறியும் டி-சர்ட் குறித்து கேள்விப்பட்டோம். ஆனால், அதில் பயன்படுத்தப்படும் மையின் வேதியியல் மாற்றங்கள் குறித்து தெரியவில்லை” என்றனர்.பிரத்யேக ஆடையில் வெப்பநிலையை சோதனை செய்யும் சொக்கலிங்கம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *