சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி தொகை ரூ.6 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் என உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் சென்னையில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்துக்கு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநிலத் தலைவர் தோ.வில்சன், மாநிலப் பொதுச் செயலாளர் பா.ஜான்சிராணி ஆகியோர் தலைமை வகித்தனர். மாநிலப்பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி, மாநில துணைத் தலைவர் ப.சு.பாரதி அண்ணா, மாநிலச் செயலாளர் ப.ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் செயல் தலைவர் எஸ்.நம்புராஜன் போராட் டத்தைத் தொடங்கிவைத்துப் பேசினார்.
இதில் பங்கேற்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப் பெருந்தகை பேசும்போது, “ஆந்திராவைப்போல தமிழ்நாட்டிலும் மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தித் தர வேண்டும் என்ற உங்களது கோரிக்கை நியாயமா னது. இதுகுறித்து சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற முதல்வரை நானும் சக எம்எல்ஏ.க்களும் வலியுறுத்துவோம்’’ என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சச்சிதானந்தம் பேசும்போது, “மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்துவோம். தமிழக அரசு கூடுதலாக மாதாந்திர உதவித் தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற நாங்கள் துணை நிற்போம்’’ என்றார்.
விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான அப்துல்சமது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் மூர்த்தி, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் ஆர்.ராதிகா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவில், சென்னை மாநகராட்சி கவுன்சிலர் எம்.சரஸ்வதி நன்றி கூறினார்.