சென்னை: “பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பழனிசாமியை நீக்கும் காலமே அதிமுகவுக்கு பொற்காலம்” என்று சென்னையில் நடைபெற்ற அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை எழும்பூரில் இன்று நடைபெற்றது. மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், ஃபெஞ்சல் புயல் தாக்கத்தால் பெய்த அதிகனமழை காரணமாக உயிரிழந்தவர்களுக்கும், பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட நிரந்தர பொதுச் செயலாளர் பதவி வழங்கியதை நீக்கியதற்கு கண்டனம் தெரிவித்தும், மதுரையில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைப்பதில் திமுக இரட்டை வேடம் போடுவதாக கூறி கண்டனம் தெரிவித்தும், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை தாமதப்படுத்தி திமுக அரசை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அதிமுகவை தொண்டர்கள் இயக்கமாக மாற்றுவது, திமுக ஆட்சியை அகற்றுவது என்பன உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியது: “நான் தர்மயுத்தத்தை தொடங்கிய பின்னர் ஏராளமான வேதனை, சோதனைகளை சந்தித்தேன். கடந்த மக்களவை தேர்தலில் ராமநாதபுரத்தில் போட்டியிட்டபோது, 6 ஓ.பன்னீர்செல்வம்களை நிறுத்தினார்கள். நான் வாக்குப்பதிவு இயந்திரத்தில் 22-வது இடத்தில் சுயேச்சை வேட்பாளராக இருந்தேன். எனக்கு முன்பும், பின்பும் தலா 3 ஓ.பன்னீர்செல்வம்கள் இருந்தனர். பழனிசாமி செய்த துரோகங்களை மக்களிடம் எடுத்து கூறியதன் விளைவாக, 38 சதவீத வாக்குகளை பெற்றேன். அதிமுக டெபாசிட்டை இழந்தது.
அதிமுகவில் 1989-ம் ஆண்டுக்கு முன்பு பழனிசாமி உறுப்பினராக கூட இல்லை. அவர் பேசுவதெல்லாம் பொய். நான் ஜானகி அணியில் இருந்து ஜெயலலிதாவுக்கு பாதக செயலை செய்ததாக பழனிசாமி உருவப்படுத்தினார். அதே ஜானகிக்கு இன்று பழனிசாமி நூற்றாண்டு விழா எடுத்திருக்கிறார். இது தான் காலத்தின் கோலம். அதிமுகவின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா 30 ஆண்டுகள் வழி நடத்தி இருக்கிறார். 15 ஆண்டுகளுக்கு மேல் முதல்வராக இருந்திருக்கிறார். அவரை கவுரவிக்கும் வகையில் கட்சியின் உச்சபட்ச பதவியாக நிரந்தர பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதை ரத்து செய்து, பொதுச் செயலாளர் பதவியை பழனிசாமி கைப்பற்றி இருக்கிறார். இது ஜெயலலிதாவுக்கு செய்த துரோகம்.
பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பழனிசாமியை நீக்கும் காலமே அதிமுகவுக்கு பொற்காலம். பழனிசாமியின் சர்வாதிகாரம் முடிவுக்கு வரும் காலம் நெருங்கிவிட்டது. விரைவில் தொண்டர்களின் இயக்கமான அதிமுக தொண்டர்கள் கைக்கு வரும். விரைவில் மதுரையில் மாநாடு நடத்தப்படும், அதனைத் தொடர்ந்து கோவையிலும், இறுதியில் சென்னையில் நடத்தப்படும்” என்று அவர் கூறினார். இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், தருமர் எம்பி, மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ, கொள்கை பரப்பு செயலாளர் மருது அழகுராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.