மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
3-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் முதல் கட்ட ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூருவில் இன்று(பிப்.21) தொடங்கின. 7-வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸுடன் மோதியது.
டாஸ் வென்ற கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு கேப்டன் மந்தனா அதிரடியாக விளையாடி 26 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அவருக்குப் பின்னர் வந்த எல்லீஸ் பெர்ரி பொறுப்புடன் விளையாடி ஒருபுறம் ரன் குவிக்க மற்றொரு புறம் விக்கெட்டுகள் மளமளவென சரியத் தொடங்கின.
இருந்தாலும் நங்கூரம் பாய்ச்சியது போல் தனது பாணியில் ஆட்டத்தைக் காட்டிய எல்லீஸ் பெர்ரி 43 பந்துகளில் 81 ரன்கள் குவித்து வெளியேறினார். அதில் 11 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும். அவரைத் தவிர்த்து விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 28 ரன்கள் விளாசினார்.
மும்பை அணித் தரப்பில் அமன்ஜோத் கௌர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது. இதன்மூலம் மும்பை அணிக்கு 168 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதலிரண்டு போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிபெற்ற பெங்களூரு அணி இந்தப் போட்டியிலும் வென்று ஹாட்ரிக் வெற்றிபெறுமா? என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.