தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.7.6 கோடி மதிப்புடைய 7.6 கிலோ உயர்ரக கஞ்சா போதைப்பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
பயணிகளை மோப்ப நாய் உதவியோடு காவல்துறையினர் சோதனை செய்துகொண்டிருந்த போது கஞ்சாவை மறைத்து வைத்திருந்த பெட்டியைப் பார்த்ததும் அங்கேயே அமர்ந்துகொண்டு தரையை தோண்டுவது போல செய்து காவல்துறையினருக்குக் காட்டிக்கொடுத்தது.
உடனடியாக பெட்டியை திறந்து, போதை பொருளை கண்டுபிடித்து பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், கடத்தி வந்த பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து, சென்னை வரும் தனியார் பயணிகள் விமானத்தில், பெருமளவு போதைப் பொருள்கள் கடத்தி வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை அடுத்து விமான நிலைய சுங்க அதிகாரிகள், நேற்று இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்தில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதோடு போதை பொருளை கண்டுபிடிப்பதற்கான, நிபுணத்துவம் வாய்ந்த மோப்ப நாயையும், இந்த சோதனைக்கு பயன்படுத்தினர்.