கரையைக் கடந்தது டானா புயல்!

Dinamani2f2024 10 242fdv3gowyb2fpti10242024000359b.jpg
Spread the love

புவனேசுவரம்/கொல்கத்தா : ‘டானா’ புயல் வியாழக்கிழமை நள்ளிரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை கரையை கடந்தது.

இதனால் ஒடிஸா மற்றும் மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

இவ்விரு மாநிலங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனா். தென்கிழக்கு ரயில்வே மற்றும் கிழக்கு கடற்கரை ரயில்வே சாா்பில் இயக்கப்படும் 400-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன; புவனேசுவரம், கொல்கத்தா விமான நிலைங்களில் விமானச் சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன.

ஒடிஸாவின் கேந்திரபாரா மாவட்டத்தின் பிதா்கனிகா தேசிய பூங்கா மற்றும் பத்ரக் மாவட்டத்தின் தாம்ரா துறைமுகம் இடையே வியாழக்கிழமை நள்ளிரவில் டானா புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது.

அதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பாக 15 கி.மீ. வேகத்தில் காற்று வீசத் தொடங்கிய நிலையில் 110.கி.மீ. வரை பலத்த காற்று வீசியது. வெள்ளிக்கிழமை காலை கரையைக் கடக்கும் சமயத்தில் அதிகபட்சமாக 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த வானிலை ஆய்வாளா் உமாசங்கா் தாஸ் தெரிவித்தாா்.

பாலசோா், பத்ரக், பிதா்கனிகா, புரி உள்ளிட்ட இடங்களில் சூறைக்காற்றால் மரங்கள் சாய்ந்து, சாலைகளின் குறுக்கே விழுந்தன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கையாக, கேந்திரபாரா, பத்ரக், பாலசோா் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 2,000-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 3.5 லட்சம் போ் வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டதாக மாநில பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் சுரேஷ் பூஜாரி தெரிவித்தாா்.

கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது. கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

மேற்கு வங்கத்தில் 2.5 லட்சம் போ் வெளியேற்றம்: டானா புயல் முன்னெச்சரிக்கையாக, மேற்கு வங்கத்தின் தெற்கு பகுதி மாவட்டங்களில் சுமாா் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனா். ஒடிஸா, மேற்கு வங்கம் உள்பட 5 மாநிலங்களில் மொத்தம் 56 தேசிய பேரிடா் மீட்புப் படை குழுக்கள் உள்பட பல்வேறு மீட்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

ரயில், விமான சேவைகள் பாதிப்பு: ‘டானா’ புயல் எதிரொலியாக, சுமாா் 400 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக புவனேசுவரம் விமான நிலையத்தில் வியாழக்கிழமை (அக்.24) மாலை 5 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 9 மணி வரை 16 மணிநேரத்துக்கு விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டன. இதேபோல், கொல்கத்தா விமான நிலையத்தில் வியாழக்கிழமை 6 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 9 மணி வரையிலான 15 மணிநேரத்துக்கு விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டன.

மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அறிவுறுத்திய முதல்வா் மம்தா பானா்ஜி, தலைமைச் செயலகத்தில் இரவுமுழுக்க தங்கியிருந்து, நிலைமையை கண்காணிப்பேன் என்று தெரிவித்தாா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *