“கல்வியை அரசியலாக்க வேண்டாம்” – முதல்வர் ஸ்டாலினுக்கு தர்மேந்திர பிரதான் கடிதம் | Don’t politicise education – Dharmendra Pradhan letter to CM MK Stalin

1351658.jpg
Spread the love

புதுடெல்லி: “கல்வியை அரசியலாக்க வேண்டாம் . மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆராயுங்கள்.” என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக நேற்று, தமிழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, ‘சமக்ர சிக் ஷா’ திட்டத்தின்கீழ் ரூ.2,152 கோடி நிதியை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் இதனை ஒட்டி, “கல்வியை அரசியலாக்க வேண்டாம் . மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆராயுங்கள்.” என்று குறிப்பிட்டு தர்மேந்திர பிரதான் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

தர்மேந்திர பிரதான், ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நமது நாட்டின் கல்வி முறையின் எதிர்காலம் குறித்து மிகுந்த மரியாதையுடனும், ஆழ்ந்த பொறுப்புணர்வுடனும் நான் உங்களுக்கு எழுதுகிறேன். நமது மாணவர்களின் தலைவிதியை வடிவமைக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட தலைவர்களாக, அரசியலுக்கு அப்பாற்பட்டு, நமது மாணவர்களுக்கு அறிவு, திறன்கள் மற்றும் எதிர்காலத்துக்கான வாய்ப்புகளை வழங்கும் கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பது முக்கியம்.

தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 என்பது வெறும் சீர்திருத்தம் மட்டுமல்ல, இந்தியாவின் கல்வி முறையை உலகளாவிய தரத்துக்கு உயர்த்தும் நோக்கம் கொண்டது. மேலும், நமது மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையைப் பாதுகாத்து வலுப்படுத்தி நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தொலைநோக்குப் பார்வை அது.

மே 26, 2022 அன்று சென்னைக்கு பயணம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, “தமிழ் மொழி நித்தியமானது, தமிழ் கலாச்சாரம் உலகளாவியது. தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை பிரபலப்படுத்துவதில் அரசாங்கம் முழுமையாக உறுதிபூண்டுள்ளது.” என்று கூறியிருந்தார். நமது பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ், தமிழகத்துக்கும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் இடையிலான நமது பகிரப்பட்ட பன்முகத்தன்மை மற்றும் கலாச்சார சங்கமத்தை கொண்டாட இந்திய அரசாங்கத்தால் காசி தமிழ் சங்கமம் மற்றும் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டதை நீங்கள் அறிவீர்கள்.

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற காசி தமிழ் சங்கமத்தின் போது, பிரதமர் மோடி, மத்திய செம்மொழி தமிழ் நிறுவனம் (CICT) மூலம் 13 இந்திய மொழிகளில் ‘திருக்குறள்’ மொழிபெயர்ப்பை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டு காசி தமிழ் சங்கமத்தின் போது, ​​15 மொழிகளில் ‘திருக்குறள் மொழிபெயர்ப்பு மற்றும் 118 தொகுதிகளில் 46 பண்டைய இலக்கிய புத்தகங்களின் பிரெய்லி மொழிபெயர்ப்பு ஆகியவற்றை பிரதமர் மோடி வெளியிட்டார். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் காசி தமிழ் சங்கமத்தின் போது, ​​CICT ஆல் இந்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட 41 பாரம்பரிய தமிழ் இலக்கியப் படைப்புகளை உத்தரப் பிரதேச முதல்வருடன் சேர்ந்து நானும் வெளியிட்டோம்.

சித்த மருத்துவம், தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கணத் துறைகளில் அகஸ்தியரின் பங்களிப்புகள் இந்த ஆண்டு காசி தமிழ் சங்கமத்தின் முக்கிய கருப்பொருளாக வைக்கப்பட்டுள்ளன. தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் உரையை உடனடியாக மொழிபெயர்ப்பதற்காக அனுவாதினி மற்றும் பாஷினி போன்ற பல்வேறு தொழில்நுட்ப கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. உயர் கல்வி நிறுவன சேர்க்கைக்கான முக்கிய போட்டித் தேர்வுகள் தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்படுகின்றன. 2024 செப்டம்பரில் சிங்கப்பூருக்குச் சென்ற பிரதமர் மோடி, இந்தியாவின் முதல் திருவள்ளுவர் கலாச்சார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்படும் என அறிவித்தார்.

தமிழ் மொழி உலகின் பழமையான பாரம்பரிய மொழிகளில் ஒன்றாகும். தமிழ் இந்தியாவின் பழமையான மொழி என்பது தேசிய பெருமைக்குரிய விஷயம். மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் பாரதிய பாஷா உத்சவத்தை கொண்டாடத் தொடங்கினோம். கடந்த ஆண்டு நடைபெற்ற பதினைந்து வார கால கொண்டாட்டங்களில் கோடிக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புகழ்பெற்ற நிறுவனங்களில் சுப்பிரமணிய பாரதி இருக்கையை நிறுவுவதன் மூலம் தமிழ்நாட்டின் தனித்துவமான இலக்கிய மற்றும் கலாச்சார மரபைக் கொண்டாட இந்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த முயற்சிகள் தேசிய மற்றும் உலகளாவிய அளவில் தமிழை வளர்ப்பதற்கும் ஊக்குவிப்பதற்குமான மத்திய அரசின் உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும். அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து இந்திய மொழிகளையும் பாரதிய மொழிகளாக நாங்கள் கருதுகிறோம். அதன்படி தமிழுக்கு அதற்குரிய முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

இந்தியாவின் வளமான மொழி பாரம்பரியமும், ஆழமான மற்றும் அசைக்க முடியாத மொழிக்கான மரியாதையும் NEP 2020 இன் மையமாக இருக்கிறது. இந்தக் கொள்கை, ஒவ்வொரு மாணவருக்கும் அவரவர் தாய்மொழியில் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்கிறது. தமிழ் என்பது ஒரு பிராந்திய அடையாளம் மட்டுமல்ல, ஒரு தேசியப் பொக்கிஷம் என்பதை வலுப்படுத்துகிறது.

எந்தவொரு மாநிலத்தின் மீதும் அல்லது சமூகத்தின் மீதும் எந்தவொரு மொழியையும் திணிக்கும் கேள்விக்கு இடமேயில்லை என்பதை நான் சந்தேகத்திற்கு இடமின்றி கூற விரும்புகிறேன். NEP 2020 மொழி சுதந்திரத்தின் கொள்கையை நிலைநிறுத்துகிறது. மாணவர்கள் தங்கள் விருப்பப்படி ஒரு மொழியை தொடர்ந்து கற்க உறுதி செய்கிறது. உண்மையில், இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, பல பத்தாண்டுகளாக நமது கல்வி முறையில் படிப்படியாக ஓரங்கட்டப்பட்ட தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளின் கற்பித்தலை மீட்டெடுப்பதும் வலுப்படுத்துவதுமாகும்.

இது 1968 முதல் இந்தியாவின் கல்வி கட்டமைப்பின் முதுகெலும்பாக இருக்கும் மும்மொழிக் கொள்கையை ஒரு முக்கியமான கட்டத்திற்குக் கொண்டுவருகிறது. துரதிர்ஷ்டவசமாக, தொடர்ச்சியான கல்விக் கொள்கைகளின் ஒரு பகுதியாக இருந்தபோதிலும், அது ஒருபோதும் உணர்வுப்பூர்வமாக செயல்படுத்தப்படவில்லை. பள்ளிகளில் இந்திய மொழிகளை முறையாகக் கற்பிப்பதில் இது சரிவுக்கு வழிவகுத்தது. காலப்போக்கில், இது வெளிநாட்டு மொழிகளை அதிகமாக நம்பியிருப்பதற்கு வழிவகுத்தது. மாணவர்கள் தங்கள் மொழி வேர்களை வெளிப்படுத்துவதை மட்டுப்படுத்தியது. தமிழ் உட்பட ஒவ்வொரு இந்திய மொழியும் கல்வியில் அதன் சரியான இடத்தைப் பெறுவதை உறுதி செய்வதன் மூலம் இந்த வரலாற்றுத் தவறுகளை சரிசெய்ய NEP 2020 முயல்கிறது.

தமிழ்நாடு எப்போதும் சமூக முன்னேற்றம் மற்றும் கல்வி முன்னேற்றத்தில் முன்னோடியாக இருந்து வருகிறது. இந்தியாவில் மிகவும் மாற்றத்தை ஏற்படுத்தும் சீர்திருத்தங்களில் சிலவற்றிற்கு முன்னோடியாக தமிழகம் உள்ளது.

இருப்பினும், அரசியல் காரணங்களுக்காக NEP 2020 க்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பதால், தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இந்தக் கொள்கை வழங்கும் மகத்தான வாய்ப்புகள் மற்றும் வளங்களை பெற முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். தேசிய கல்விக் கொள்கை நெகிழ்வானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் தங்கள் தனித்துவமான கல்வித் தேவைகளுக்கு ஏற்ப அதன் செயல்படுத்தலை வகுத்துக்கொள்ள அனுமதிக்கிறது. மேலும், சமக்ர சிக்ஷா போன்ற மத்திய ஆதரவு திட்டங்கள் NEP 2020 உடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், PM SHRI பள்ளிகள் தேசிய கல்விக் கொள்கையில் முன்மாதிரியான பள்ளிகளாகக் கருதப்படுகின்றன.

எனவே, தேசிய கல்விக் கொள்கையை குறுகிய பார்வையுடன் பார்ப்பதும், முற்போக்கான கல்வி சீர்திருத்தங்களை தங்கள் அரசியல் கதைகளைத் தக்கவைத்துக்கொள்வதற்கான அச்சுறுத்தல்களாக மாற்றுவதும் மாநிலத்திற்கு பொருத்தமற்றது. பிரதமர் மோடிக்கு அனுப்பப்பட்ட கடிதம், மோடி அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்பட்ட கூட்டுறவு கூட்டாட்சி உணர்வை முழுமையாக மறுப்பதாகும். இந்தக் கொள்கை எந்த மொழியையும் திணிப்பதை ஆதரிக்கவில்லை. அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும், பாஜக அல்லாத பல மாநிலங்கள் NEP இன் முற்போக்கான கொள்கைகளை செயல்படுத்தியுள்ளன. NEP 2020, எல்லைகளை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அவற்றைச் சுருக்குவதை அல்ல.

எனவே, அரசியல் வேறுபாடுகளைத் தவிர்த்து, நமது இளம் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த விஷயத்தை முழுமையாக ஆராயுமாறு நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன்.”என்று தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *