சென்னை: அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று புயலாக வலுப்பெற்று நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம், தென் தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சியால் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, புயலாக வலுபெறக்கூடும். இது, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (அக். 24) காலைவடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் தீவிர புயலாக நிலவக்கூடும். வடக்கு ஒடிசா–மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில், பூரி-சாகர் தீவுகளுக்கு இடையே தீவிர புயலாக நாளை இரவு கரையை கடக்கக்கூடும். அப்போது, அந்த பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மத்திய கிழக்கு, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் 23, 24, 25-ம் தேதிகளில் அதிகபட்சமாக 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 ரயில்கள் ரத்து: டானா புயல் காரணமாக, பாதுகாப்பு நடவடிக்கையாக, சென்னை சென்ட்ரல் – ஹவுரா விரைவு ரயில் உட்பட 28 ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. அதன் விவரம் வருமாறு: ஷாலிமார் – சென்னை சென்ட்ரலுக்கு அக்.24-ம் தேதி பிற்பகல் 3.20 மணிக்கு புறப்படும் கோரமண்டல் விரைவு ரயில் (12841), ஹவுரா – திருச்சிக்கு அக்.24-ம் தேதி மாலை 5.40 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் (12663), ஹவுரா – சென்னை சென்ட்ரலுக்கு அக்.24ம் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் (12839), சென்னை சென்ட்ரல் – ஹவுராவுக்கு அக்.23-ம் தேதி இரவு 7 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் (12840), புதுச்சேரி – ஹவுராவுக்கு அக்.23-ம் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் (12868), சென்னை சென்ட்ரல் – ஷாலிமாருக்கு அக்.23-ம் தேதி இரவு 7.50 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் (22826) ஆகியவை ரத்து செய்யப்பட உள்ளன.
மேலும், சென்னை சென்ட்ரல் – ஹவுராவுக்கு அக்.24 -ம் தேதி காலை 7 மணிக்கு புறப்படும் கோரமண்டல் விரைவு ரயில் (12842), சென்னை சென்ட்ரல் – சந்திரகாச்சிக்கு அக்.24-ம் தேதி காலை 8.10 மணிக்கு புறப்படும் ஏசி விரைவு ரயில் (22808), தாம்பரம் – சந்திரகாச்சிக்கு அக். 24-ம் தேதி மதியம் 1 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06095), சென்னை சென்ட்ரல் – சந்திரகாச்சிக்கு அக்.23-ம் தேதி மதியம் 1.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06089) உட்பட 28 விரைவு ரயில்கள ரத்து செய்யப்பட உள்ளன.