சென்னை: கூவம் ஆற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய பெண்ணை சிறப்பு அதிவிரைவுப் படை காவலர் காப்பாற்றி, முதல் உதவி சிகிச்சை அளித்தார். இதையறிந்த காவல் ஆணையர் அருண் சம்பந்தப்பட்ட காவலரை நேரில் அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை-1, முதல்நிலை காவலர் பி.வினோத். இவர் சென்னை பெருநகர காவல் ஆணையரின் சிறப்பு அதிவிரைவுப் படை பிரிவில் பணிபுரிந்து வருகிறார். நேற்று (13-ம் தேதி) காலை விருகம்பாக்கம், நடேசன் தெரு பகுதியில் பணியிலிருந்த போது, அருகில் உள்ள கூவம் ஆற்றில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தவறி விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தார்.
அப்பெண்ணின் கதறல் சத்தம் கேட்டு, அருகில் பணியிலிருந்த காவலர் வினோத் விரைந்து செயல்பட்டு, அருகிலிருந்த பொக்லைன் வாகனத்தை வரவழைத்து அந்த பெண்ணை மீட்டு முதலுதவி அளித்தார். விசாரணையில் கூவம் ஆற்றில் தவறி விழுந்த பெண் அம்பத்தூர் நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த தேவி (40) என்பது தெரியவந்தது.
இதையடுத்து தேவியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் உறவினர்களிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார். உயிருக்கு போராடிய பெண்ணை தக்க சமயத்தில் காப்பாற்றிய காவலரை அங்கிருந்த பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர். காவல் ஆணையர் அருணும் நேற்று நேரில் வரவழைத்து காவலர் வினோத்தை வெகுவாகப் பாராட்டி சான்றிதழ் அளித்ததோடு வெகுமதியும் அளித்தார்.