கைதியை தாக்கிய சம்பவம்: பெண் டிஐஜி மீதான நடவடிக்கை என்ன? – ஐகோர்ட் கேள்வி | madras high court ask what is the action taken against lady dig police

1329093.jpg
Spread the love

சென்னை: வேலூர் சிறை டிஐஜி வீட்டில் திருடியதாக கைதியை தாக்கிய சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட பெண் டிஐஜி உள்ளிட்டோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரை சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, தனது வீட்டு வேலைக்கு அழைத்து சென்றதாகவும், பின் அங்கு நகை, பணத்தை திருடியதாக குற்றம் சாட்டி அவரை தாக்கி சித்ரவதை செய்ததாகவும் கூறி அவரது தாயார் கலாவதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட பெண் டிஐஜி ராஜலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக், சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை குறித்த கூடுதல் அறிக்கையை தாக்கல் செய்தார். அதற்கு மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பி.புகழேந்தி ஆஜராகி, “சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார். அதையடுத்து நீதிபதிகள், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கைதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா என்றும், கைதியை தாக்கிய சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டிஐஜி உள்ளிட்டோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், அவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு தரப்பி்ல், சம்பந்தப்பட்ட கைதி மீது சிறை குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அப்போது, “சிறைக்கு வெளியே நடந்த சம்பவத்துக்கு எப்படி சிறை குற்ற வழக்குப்பதிவு செய்ய முடியும்” என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சிறையில் உள்ள விலை உயர்ந்த தேக்குமரத்தை வெட்டி அதிகாரிகள் கட்டில் உள்ளிட்டவற்றை செய்வதாகவும், சிறைத்துறையினருக்கு நல்ல சம்பளத்துடன் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற புகார்களும் வருவது வேதனையளிக்கிறது, என்றனர்.

மேலும், “கடைநிலை ஊழியர் ஒருவர் பக்கத்து வீட்டுக்காரரிடம் சண்டை போடுவது போன்ற சின்ன சி்ன்ன குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து துறை ரீதியாக இடைநீக்கம் செய்யப்படும் நிலையில், பெரிய குற்றச்செயல்களில் ஈடுபடும் உயர் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்” என்றும், இந்த வழக்கில் சிறைத்துறை பெண் டிஐஜி உள்ளிட்ட 14 பேர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *