மதுரை: பொது இடங்களில் உள்ள கட்சிகள், அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்றுவது தொடர்பான வழக்கில் சேர விரும்பும் அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆக. 5-க்குள் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்யலாம் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, தவெக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மதுரை அமர்வில் நேற்று இடையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், “எங்கள் கட்சியினர், சமூகத்தில் பின்தங்கியவர்களுக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். தமிழகம் முழுவதும் ஏராளமான இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் உள்ளன.
கொடிக்கம்பங்கள் அமைப்பது கட்சிகளுக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். இந்த உரிமையையாராலும் தடுக்க முடியாது. கட்சியின் கொள்கையை பரப்புவதில் கொடிக் கம்பங்கள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. எனவே, பொதுமக்கள் அறியும் வகையில் ஆங்காங்கே கொடிக்கம்பங்களை நிறுவுவது அவசியமானது. இந்த வழக்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.