செங்கல்பட்டு: செங்கல்பட்டில் கொட்டும் மழையிலும் தசரா திருவிழா 11 ஆம் நாளையொட்டி சாமிகள் ஊர்வலம் நடைபெற்றது.
செங்கல்பட்டு நகரில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய தசரா திருவிழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. நவராத்திரி திருவிழாவை ஆண்டுதோறும் 10 நாள்கள் நடைபெறும். 11 ஆம் நாள் விஜயதசமி திருவிழாவில் மின் விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் பல்வேறு அலங்காரத்தில் மேளதாளங்கள், செண்டை மேளங்கள், சிவவாத்தியங்கள் முழங்க வானவேடிக்கையுடன் சாமிகள் ஊர்வலம் நடைபெற்றது.
சாமிகள் அலங்காரத்தில் வீற்றிருக்க தசரா விழா கமிட்டியினர், கோயில்களில் இருந்து ஜிஎஸ் சாலை, அண்ணா சாலை வழியாக ஊர்வலமாக வந்து அனுமந்த புத்தேரி அண்ணா சாலை முக்கூட்டில் ஒவ்வொரு சாமியும் நின்று வன்னி மரம் குத்தி காப்புகள் கழற்றி ஊர்வலம் நடைபெற்றது.
சின்னக்கடை சாமி, அண்ணா சாலை முத்துமாரியம்மன் கோயில், அண்ணா சாலை பழைய அங்காளம்மன் கோயில், பூக்கடை சாமி, ஜவுளிக்கடை சாமி, மளிகைக்கடை சாமி, ஜீவானந்தம் தெரு அங்காளம்மன் கோயில், சின்ன நத்தம் சுந்தர விநாயகர் கோயில், பெரிய நத்தம் ஓசூர் அம்மன் கோயில், மதுரை வீரன் கோயில், நாகாத்தம்மன் கோயில், மார்க்கெட் சின்ன அம்மன் கோயில், மேட்டு தெரு திரௌபதி அம்மன் கோயில், புதுஏரி செல்வ விநாயகர் முத்துமாரியம்மன் கோயில், கோட்டைவாயில் கடும்பாடி அம்மன் கோயில், செங்கல்பட்டு சின்ன மேலமையூர் கற்பக விநாயகர் கோயில் உள்ளிட்ட தசரா விழா கமிட்டி குழுக்கள் சார்பில் சுமார் 16-க்கும் மேற்பட்ட மகிஷாசூரமர்த்தினி , சிவன்-பார்வதி, முப்பெரும் தேவியர்களான வராகி பிரித்திங்கரா தேவி, பராசக்தி, அங்காளம்மன் என பல்வேறு அலங்காரங்களில் சாமிகள் பல்வேறு வாகனங்களில் ஊர்வலத்தில் வரிசையாக சென்றது.
ஊர்வலத்தில் வரும் சுவாமிகளை வரவேற்கும் விதமாக ஆண்டுதோறும் மேட்டுத்தெரு செங்கழுநீர் விநாயகர் கோயிலில் காமாட்சி அம்மன் அலங்காரத்தில் அருள் பாலித்து வீற்றிருக்க 27 ஆம் ஆண்டாக அன்னதானம் வழங்கப்பட்டது.
மதுராந்தகம், வாலாஜாபாத், பாலூர், ஆத்தூர், திம்மாவரம், கூடுவாஞ்சேரி, சிங்கப்பெருமாள் கோவில், மறைமலை,நகர் மதுராந்தகம், கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மாமல்லபுரம் மற்றும் உள்ளூர், வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்து மக்கள் சாதி,மத, பேதமின்றி ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் குழந்தைகளுடன் குடும்பத்துடன் நண்பர்களுடன் சனிக்கிழமை இரவே வந்து கடைவீதிகள் கேளிக்கை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சாமி ஊர்வலத்தை கண்டு மகிழ்ந்தனர். திருவிழாக் கடைகளில் பொருள்கள் வாங்கியும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் விளையாடியும் மகிழ்ந்தனர்.
தசரா திருவிழா என்றாலே நகராட்சி நிர்வாகம் தசரா கடைகள் ராட்டினங்கள், கடைவீதிகள் அமைக்க ஏலம் விடப்பட்டு ஒப்பந்ததாரர்கள் ஏலம் எடுப்பார்கள்.
அப்படி இந்தாண்டு 27 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டு தசரா நடைபெற்றது. இந்த தசரா விழாவால் செங்கல்பட்டு நகராட்சிக்கு ஒரு கணிசமான தொகை கிடைத்து வருகிறது.
நகராட்சி நிர்வாகமும் ஒப்பந்ததாரர்கள் மட்டுமே நடத்தி வந்த விழாவில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு, சார் ஆட்சியர் நாராயண சர்மா, டிஎஸ்பி புகழேந்தி கணேஷ், அரசுத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டும் அடிப்படை வசதிகளுடன் நடைபெற தகுந்த ஏற்பாடுகளை செய்து உணவு, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்துத் துறையினரும் அந்தந்த பணிகளை திறம்படச் செய்ய உத்தரவிட்டதால் இந்த ஆண்டு கழிப்பறை, குடிநீர் வசதி என 10 நாட்களும் செய்யப்பட்டதுடன் அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடைகளையும் ஆய்வு மேற்கொண்டனர்.