கொரோனா குமார் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்பு மற்றும் பட நிறுவனம் இடையேயான பிரச்னை முடிவுக்கு வந்ததையடுத்து, சிம்பு செலுத்திய ரூ. 1 கோடியை, வட்டியுடன் அவருக்கு திருப்பி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா குமார் படம் நடிப்பதற்கு நடிகர் சிம்பு அதற்குரிய சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு, படப்பிடிப்புக்கு வரவில்லை என்றுக்கூறி, மற்ற படங்களில் சிம்பு நடிக்க தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்து, கொரோனா குமார் பட நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இவ்வழக்கு விசாரணையின்போது, ரூ. 1 கோடி உத்தரவாதத்தை செலுத்த வேண்டும் என்று சிம்புவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
பின்னர், சிம்பு மற்றும் கொரோனா குமார் பட நிறுவனத்திற்கு இடையேயான பிரச்னைக்கு தீர்வுகாண, ஓய்வுபெற்ற நீதிபதியை மத்தியஸ்தராக உயர் நீதிமன்றம் நியமித்தது.
இந்நிலையில், இவ்வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், மத்தியஸ்தர் முன் உள்ள இவ்வழக்கை இருவரும் திரும்பப் பெற்றதால், சிம்பு செலுத்திய ரூ. 1 கோடியை, வட்டியுடன் ரூ. 1 கோடியே 98 ஆயிரத்து 917 ரூபாயாக சிம்புவுக்கு திரும்பக் கொடுக்க சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.