தமிழகத்தில் கோடைவெயில் வாட்டி வதைத்து வருகிறது. மேலும் வருகிற 28&ந்தேதி வரை கத்திரி வெயிலின் தாக்கம் இருக்கும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வானிலை மையம் எச்சரித்து உள்ளது.
பள்ளிகளில் சிறப்பு வகுப்பு
இதற்கிடையே பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ள நிலையில் சில தனியார்பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதில் பங்கேற்பதற்காக மாணவ, மாணவிகள் கடும் வெயிலில் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.ஏற்கனவே கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இந்த நிலையில் மீண்டும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளார்.அதில் கூறியிருப்பதாவது:-
பள்ளிகளின் மீது நடவடிக்கை
தமிழக அரசு கோடை விடுமுறையை அனைத்து பள்ளிகளுக்கு அறிவித்த பின்னரும் பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. கடுமையான வெப்பம் நிலவும் இந்த காலகட்டத்தில் கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று தங்களது ஆளுகைக்கு உட்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கவேண்டும். மீறி சிறப்பு வகுப்புகபள் எடுக்கும் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.