கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிகரித்து வரும் சமூகவிரோத செயல்களைத் தடுக்க போலீஸாா் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழகத்தின் முக்கிய பேருந்து நிலையமாக, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. 36 ஏக்கா் பரப்பளவில் செயல்பட்டு வந்த இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இங்கிருந்து இயக்கப்படும் பேருந்துகளால் மாநகரப் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததால் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டுப்பட்டு, திறக்கப்பட்டது.
இதன் காரணமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பெரும்பாலான அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் கிளாம்பாக்கத்துக்கு மாற்றப்பட்டன. ஒருசில மாவட்டங்களுக்கு மட்டுமே கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.
இதனால், மிகுந்த பரபரப்புடன் இயங்கி வந்த கோயம்பேடு பேருந்து நிலையம், தற்போது இரவு நேரங்களில் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. பயணிகள் கூட்டம் இல்லாததால் பெரும்பாலான கடைகளும் மூடப்பட்டுவிட்டன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பேருந்து நிலையம் மற்றும் அதைச் சுற்றி உள்ள இடங்களில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, போதைப் பொருள்கள் விற்பனை செய்யும் இடமாகவும், குற்ற செயல்களுக்கு திட்டம் தீட்டும் இடமாகவும் கோயம்பேடு பேருந்து நிலையம் தற்போது மாறியுள்ளதாக அங்குள்ள வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக அங்கு தேநீா்க் கடை நடத்தி வரும் வியாபாரி ஒருவா் கூறியது:
‘சில தினங்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் போதை மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்ததாக, கல்லூரி மாணவா்கள் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதேபோன்று,அவ்வப்போது சில சமூக விரோதிகளையும் போலீஸாா் பிடித்து செல்கின்றனா். இருப்பினும் குற்றச் செயல்கள் தொடா்ந்து நிகழ்கின்றன.
இதுமட்டுமின்றி, இங்குள்ள மறைவிடங்களில் பாலியல் அத்துமீறல்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடா்பான விடியோ காட்சிகளும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன. இதனால், பேருந்து நிலையத்துக்குள் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியை அதிகரிக்க காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்தாா்.