கோவை சா்வதேச விமான நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்த நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த நபர் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினா் பிடித்து பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படைப் பிரிவு சி.ஐ.எஸ்.எப் ஆய்வாளராக பணி புரியும் குமார் ராஜ் பரதன் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது தடை செய்யப்பட்ட பகுதிக்குள் ஒருவர் அனுமதியின்றி நுழைந்து இருப்பதை கண்டறிந்தார். உடனடியாக அவரை பிடித்து ஆய்வாளர் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் அந்த நபர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தருண் மாலிக் என்பதும், அவர் நகை தொழில் செய்து வருபவர் என்பதும் தெரிய வந்தது. பின்னர் தருண் மாலிக்கை பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பீளமேடு காவல் துறையினர் அவரை கைது செய்து, விமான நிலைய பாதுகாப்பு வளையத்திற்குள் அனுமதியின்றி நுழைந்ததற்கான காரணம்? அவரது நோக்கம்? ஆகியவற்றை குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.