சென்னை: சிங்கார சென்னை அட்டையின் இருப்புத் தொகையை செல்போனில் தெரிந்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் த.பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.
மெட்ரோ ரயில் பயணத்துக்கு பயன்படுத்தும் வகையில், சிங்கார சென்னை ஸ்மார்ட் அட்டை 2023-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநகர பேருந்துகளிலும் இந்த அட்டையைப் பயன்படுத்தும் திட்டத்தை கடந்த ஜன.6-ம் தேதி போக்குவரத்து அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
பயணிகளின் கோரிக்கைகள்: சென்னையின் முக்கிய பணிமனை, பேருந்து நிலையங்களில் சிங்கார சென்னை பயண அட்டை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பயணிகளிடமும் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், இந்த அட்டை தொடர்பான சில கோரிக்கைகளை சமூக வலைதளம் வாயிலாக மாநகர போக்குவரத்துக் கழகத்திடம் பயணிகள் முன்வைத்துள்ளனர்.
அவர்கள், “சிங்கார சென்னை பயண அட்டை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காலை 10 மணிமுதல் விற்பனை செய்யப்படுகிறது. பெரும்பாலான பயணிகள் காலை 6 முதல் 9 மணி வரைதான் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். இதைக் கருத்தில் கொண்டு விற்பனை நேரத்தை மாற்றியமைக்க வேண்டும்.
இதேபோல், என்எப்சி செயல்பாட்டில் இருக்கும் செல்போன்களில் சென்னை பஸ் செயலி வாயிலாக சிங்கார சென்னை அட்டையின் இருப்புத் தொகையை தெரிந்து கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்திருந்தனர்.
புதிய விற்பனையாளர்கள்: இதற்கு பதிலளித்து மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் த.பிரபுசங்கர் வெளியிட்ட பதிவில், “சிங்கார சென்னை விற்பனை மையத்தின் நேரம் தொடர்பான கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல், அட்டை தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். அதில் இருப்புத் தொகையை பயணிகள் அறிந்துகொள்வதே முதன்மையாக உள்ளது.
அதன்படி, என்எப்சி செயல்பாட்டில் இருக்கும் செல்போனில் அட்டையின் இருப்புத் தொகையை கண்டறிவது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த அட்டையை மேலும் சில விற்பனையாளர்கள் மூலம் விநியோகிக்கவும் ஏற்பாடு செய்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.