சிலை கடத்தல் வழக்கு: சென்னை சிபிஐ அலுவலகத்தில் பொன்.மாணிக்கவேல் கையெழுத்து | Idol smuggling case Bail Condition: Pon Manickavel signed at Chennai CBI office

1311956.jpg
Spread the love

சென்னை: நான்கு வார காலத்துக்கு சென்னை சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற முன் ஜாமீன் நிபந்தனையின்படி, சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில், ஓய்வுபெற்ற ஐஜி-யான பொன்.மாணிக்கவேல் ஆஜராகி கையெழுத்திட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் பழவூர் கோயிலில் கடந்த 2005-ம் ஆண்டு 13 ஐம்பொன் சிலைகள் திருடுபோயின. இதில் 6 சிலைகள் விருதுநகர் மாவட்டம் ஆலப்பட்டி என்ற கிராமத்தில் கடந்த 2008-ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டன. இந்த சிலைகளை அப்போதைய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளராக இருந்த காதர் பாஷா பறிமுதல் செய்தார். இந்நிலையில், இந்த சிலைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல், சர்வதேச சிலை கடத்தல் கும்பலுக்கு காதர் பாஷா விற்பனை செய்துவிட்டதாக கடந்த 2017-ம் ஆண்டு, அப்போதையை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி-யாக இருந்த பொன்.மாணிக்கவேல் வழக்குப்பதிவு செய்து காதர் பாஷாவை கைது செய்து சிறையில் அடைத்தார். அப்போது காதர் பாஷா திருவள்ளூர் மாவட்டம் டிஎஸ்பி-யாக பணியாற்றி வந்தார்.

இந்த வழக்கில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த காதர் பாஷா, சென்னை உயர் நீதிமன்றத்தில், பொன்.மாணிக்கவேல், சிலைக் கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தன்னை பழிவாங்கும் நோக்கில் பொய் வழக்கில் கைது செய்திருப்பதாகவும், இது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு தெரிவித்த காரணத்தால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த மாதம் 10-ம் தேதி பாலவாக்கத்தில் உள்ள பொன்.மாணிக்கவேல் வீட்டில் டெல்லியில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள் தன் மீது பொய் வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும், தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, கடந்த மாதம் 30-ம் தேதி பொன்.மாணிக்கவேலுக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி, நான்கு வார காலத்துக்கு சென்னை சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து பொன்.மாணிக்கவேல் திங்கள்கிழமை காலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி கைழுத்திட்டுச் சென்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *