சென்னையில் தனியார் மதுபான ஆலை வசமுள்ள அரசு நிலத்தை மீட்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு | HC orders recovery of govt land owned by private liquor factory in Chennai

1357555.jpg
Spread the love

சென்னை: மதுரவாயல், வளசரவாக்கம் பகுதியில் தனியார் மதுபான ஆலை வசம் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை உடனடியாக மீட்கவும், அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை வரும் ஏப்.21-ம் தேதிக்குள் அகற்றவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மோகன் மதுபான ஆலை நிறுவனத்துக்கு சொந்தமாக வளசரவாக்கம், மதுரவாயல் பகுதியில் இருந்த சுமார் 248 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கடந்த 1975-ம் ஆண்டு கையகப்படுத்தி உத்தரவிட்டது. இந்த நிலத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் புதிய ராமாபுரம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து, கடந்த 2017-ம் ஆண்டு மோகன் மதுபான ஆலை நிர்வாகம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதில், “கடந்த 2013-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின்படி எங்களது நிலத்தை அரசு கையகப்படுத்தியது தவறு” எனக் கோரியிருந்தது. இந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததால் தனியார் மதுபான ஆலை நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், “புதிய ராமாபுரம் திட்டம் கைவிடப்பட்டதால், தற்போது வரை அந்த நிலம் மனுதாரர் நிறுவனத்தின் வசம்தான் உள்ளது. அதனால், நிலத்தை திரும்ப பெற மனுதாரருக்கு அனைத்து உரிமையும் உள்ளது,” என வாதிடப்பட்டது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆர்.ரமன்லால், “மோகன் மதுபான ஆலைக்கு சொந்தமான அந்த நிலத்தை கடந்த 1975-ம் ஆண்டே தமிழக அரசு சட்ட ரீதியாக கையகப்படுத்தி வீட்டு வசதி வாரியத்திடம் ஒப்படைத்து விட்டது. அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது. நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகையும் உரிய சிவில் நீதிமன்றத்தில் கடந்த 1986-ம் ஆண்டு டிபாசிட் செய்யப்பட்டுவிட்டது.

ஆனால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலத்தை, மனுதாரர் நிறுவனம் முறைகேடாக ஆக்கிரமித்துக்கொண்டு தற்போதும் தனது வசம் வைத்துள்ளது. எனவே தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். அத்துடன் நிலத்தை காலி செய்து கொடுக்கவும் உத்தரவிட வேண்டும்,” என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “அரசு கையகப்படுத்திய நிலத்தில் தனியார் மதுபான ஆலை நிர்வாகம் செயல்படுவது சட்டவிரோதம். அந்த நிலத்தை மனுதாரர் நிறுவனத்திடமிருந்து மீட்க தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து அதை பொது பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த 248 ஏக்கர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வரும் ஏப்.21-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,” என உத்தரவிட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *