திருநெல்வேலி: ஜமைக்கா நாட்டில் கொள்ளையர்களின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த திருநெல்வேலி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த விக்னேஷின் (31) உடல் 78 நாட்களுக்குப் பின்பு சொந்த ஊருக்கு இன்று கொண்டுவரப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
திருநெல்வேலி சந்திப்பு புளியந்தோப்பு நடுத்தெரு நாகராஜனின் மகன் விக்னேஷ். ஜமைக்காவில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி அந்த சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளையர்கள் புகுந்து பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச் செல்லும்போது, துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் விக்னேஷ் உயிரிழந்தார். மேலும் இருவருக்கு காயம் ஏற்பட்டது.
விக்னேஷின் உடல் ஜமைக்கா அதிகாரிகள் வசம் இருப்பதாகவும், சட்ட நடவடிக்கைகள் முடிந்தபிறகு 10 நாட்களுக்குள் உடல் சொந்த ஊருக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், நிதி பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவருவதில் சிக்கல் நீடித்தது.
இந்நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அதிகாரிகளுடன் பேசி விக்னேஷின் உடலை சொந்த நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி கடந்த மாதம் 26-ம் தேதி விக்னேஷின் உடல் ஜமைக்காவிலிருந்து அமெரிக்காவின் மியாமி விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து நியூயார்க், மும்பை, திருவனந்தபுரம் வழியாக சொந்த ஊருக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த ஆம்புலன்ஸ் மூலம் இன்று காலை வந்தடைந்தது. விக்னேஷின் உடலை பார்த்து அவரது தாயார் பொன்னம்மாள், சகோதரி ருக்மணி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
திருநெல்வேலி எம்.பி. ராபர்ட் புரூஸ், பாளையங்கோட்டை எம்.எல்.ஏ. அப்துல்வகாப், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் கோ. ராமகிருஷ்ணன், மாநகராட்சி கவுன்சிலர்கள், பாஜக மாவட்ட தலைவர் முத்துபலவேசம், மாநில இளைஞரணி துணை தலைவர் நயினார் பாலாஜி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் விக்னேஷுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இதை தொடர்ந்து அவரது உடல் திருநெல்வேலி சிந்துபூந்துறை மின்மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
இறுதி அஞ்சலி செலுத்தியபின் செய்தியாளர்களிடம் ராபர்ட் புரூஸ் எம்.பி., ஜமைக்காவிலிருந்து விக்னேஷின் உடலை கொண்டு வருவதற்காக ஆகும் செலவு ரூ.18 லட்சத்தை தருவதாக தமிழக அரசு சொல்லியிருந்தது. தற்போது மத்திய வெளியுறவுத்துறை அந்த தொகையை கொடுத்திருப்பதால் தமிழக அரசு ரூ.18 லட்சத்தை விக்னேஷின் குடும்பத்தினருக்கு கொடுத்து உதவ வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வைக்க இருப்பதாக தெரிவித்தார்.
இதனிடையே, விக்னேஷின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவரும் விவகாரத்தில் மத்திய அரசுக்கும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் நன்றி தெரிவித்து பாஜகவினரும், மறுபுறம் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து திமுகவினரும் போட்டிபோட்டு சுவரொட்டிகளை ஒட்டியிருப்பது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.