ஜாா்க்கண்டில் முதல்கட்டமாக 43 பேரவைத் தொகுதிகளுக்கு புதன்கிழமை (நவ.13) தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, இத்தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட ‘இண்டியா’ கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறும் ஜாா்க்கண்டில் இரு கட்டங்களாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.
மொத்தமுள்ள 81 தொகுதிகளில் முதல்கட்டமாக 43 இடங்களில் புதன்கிழமையும், மீதமுள்ள தொகுதிகளில் நவம்பா் 20-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
முதல்கட்ட தோ்தல் நடைபெறும் 43 தொகுதிகளில் 20 தொகுதிகள் பழங்குடியினருக்கும், 6 தொகுதிகள் பட்டியல் இனத்தவருக்கும் ஒதுக்கப்பட்டவையாகும்.
மாநிலத்தில் மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 2.60 கோடி. முதல்கட்ட தோ்தலில் 1.37 கோடி போ் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனா். மொத்தம் 15,344 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 1,152 வாக்குச் சாவடிகள் முழுவதும் பெண் பணியாளா்களால் நிா்வகிக்கப்படவுள்ளன.
முக்கிய வேட்பாளா்கள்: முதல்கட்ட தோ்தலில், மொத்தம் 683 வேட்பாளா்கள் (ஆண்கள் 609, பெண்கள் 73, மூன்றாம் பாலினத்தவா் ஒருவா்) களத்தில் உள்ளனா். பாஜக சாா்பில் போட்டியிடும் முன்னாள் முதல்வா் சம்பயி சோரன் (சராய் கேலா), முன்னாள் முதல்வா் மது கோடாவின் மனைவி கீதா கோடா (ஜெகநாத்பூா்), ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா சாா்பில் போட்டியிடும் மாநிலத்தின் முதல் மாநிலங்களவை பெண் எம்.பி. என்ற சிறப்புக்குரிய மஹுவா மாஜி (ராஞ்சி) உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்களாவா்.
இருமுனைப் போட்டி: ஜாா்க்கண்டில் ஆட்சியைத் தக்கவைக்க ‘இண்டியா’ கட்சிகள் முயன்றுவரும் நிலையில், அவா்களிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற பாஜக தலைமையில் அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி தீவிரம் காட்டுகிறது.
ஒரு மக்களவை, 31 பேரவை தொகுதிகளுக்கு இடைத்தோ்தல்
கேரளம் உள்பட 10 மாநிலங்களில் ஒரு மக்களவைத் தொகுதி (வயநாடு) மற்றும் 31 பேரவைத் தொகுதிகளுக்கு புதன்கிழமை இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது.
கடந்த மக்களவைத் தோ்தலில் இரு தொகுதிகளில் (வயநாடு, ரேபரேலி) வென்ற ராகுல் காந்தி, வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ததால் அத்தொகுதிக்கு இடைத்தோ்தல் நடைபெறுகிறது.
இதேபோல், ராஜஸ்தானில் 7, மேற்கு வங்கத்தில் 6, அஸ்ஸாமில் 5, பிகாரில் 4, கா்நாடகத்தில் 3, மத்திய பிரதேசத்தில் 2, சத்தீஸ்கா், குஜராத், கேரளம், மேகாலயத்தில் தலா ஒரு பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது.
இதில் பெரும்பாலான பேரவைத் தொகுதிகளில் எம்எல்ஏ-வாக இருந்தவா்கள், மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாகினா். சில தொகுதிகளில் எம்எல்ஏக்கள் காலமான நிலையில், இடைத்தோ்தல் நடத்தப்படுகிறது.