டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற ஜூன் மாதம் மேற்கு இந்திய தீவு மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி தேர்வு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று அஜித் அகார்க்கர் தலைமையிலான இந்திய அணி தேர்வுக் குழுவினர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்து அறிவித்து உள்ளனர்.
இந்திய அணி அறிவிப்பு
இதில் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்புக்காக நீண்டகாலமாக காத்துக் கொண்டிருந்த சஞ்சு சாம்சன் மற்றும் ஐ.பி.எல்.போட்டியில் அதிரடி காட்டி வரும் ஷிவம் துபேவுக்கு வாய்ப்புக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது. கார் விபத்து காரணமாக சிகிச்சையில் இருந்த ரிஷப் பந்த் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். மேலும் மோசமான பார்மில் உள்ள ஹர்திக் பாண்டியாவுக்கும் தேர்வு செய்யப்பட்டு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. இது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
டி20 உலக கோப்பைக்கான போட்டியில் இடம் பிடித்த 15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் விபரம் வருமாறு:–
ரோஹித் சர்மா(கேப்டன்), விராட் கோலி, ஜெய்ஸ்வால், சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா, ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்த்திக் பாண்டியா(துணை கேப்டன்), ஷிவம் துபே, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், சாஹல், அர்ஷ்தீப் சிங், மொகமது சிராஜ்.
ரிசர்வ் வீரர்களாக ஷுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது, ஆவேஷ் கான் இடம் பிடித்து இருக்கிறார்கள்.
ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறாமல் கூட போகலாம் என கூறப்பட்ட நிலையில் அவருக்கு அணியில் துணை கேப்டன்பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணியுடன் யுஸ்வேந்திர சாஹல்இணைந்திருக்கிறார்.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கே.எல்.ராகுல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்திய அணியில் தமிழக வீரர்கள் யாரும் இடம்பிடிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.