தஞ்சை தமிழ்ப் பல்கலை., பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பாடிய ஆளுநர் | Tamil University Convocation: TN Governor participates; Ministers boycott

1328066.jpg
Spread the love

தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இன்று (அக்.19) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் பங்கேற்றதால், தமிழக அமைச்சர்கள் அந்த நிகழ்வில் பங்கேற்பதை புறக்கணித்தனர். அதேசமயம், இன்றைய தமிழ்ப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் முழுமையாகப் பாடினார்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் 14-வது பட்டமளிப்பு விழா இன்று (அக்.19) நடைபெற்றது. இவ்விழாவுக்கு வந்தவர்களை பல்கலைக் கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் வரவேற்றார். விழாவில், முனைவர் பட்டம், ஆய்வியல் நிறைஞர் பட்டம், முதுகலை, இளங்கலை பட்டங்களைப் பெற்ற 668 மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார்.

தொடர்ந்து பட்டமளிப்பு விழா பேரூரையாற்றிய காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக் கழக துணைவேந்தர் ந.பஞ்சநதம் பேசிதாவது: “தமிழ் மொழியை மேன்மேலும் சீர்தூக்க வேண்டும், சிறப்பிக்க வேண்டும் அதன் புகழை செழிக்கச் செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தமிழ் பெரியோர்களின் நல்லாசியால் தொடங்கப்பட்டது தான் தமிழ் அறிவாலயம் எனும் இந்த தமிழ் பல்கலைக்கழகம்.

இந்தியாவிலேயே ஏன், உலகிலேயே ஒரு மொழிக்கு என்று தனித்துவமாக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் உள்ளது என்றால் அது தஞ்சை தமிழ்ப் பல்கலைககழகம் மட்டுமே. தமிழ் மொழி மட்டுமல்ல, தமிழ் இனமே பண்பாட்டின் அடையாளமாகத் தான் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. தமிழில் நமக்கு முழுமையாகக் கிடைத்த முதல் நூலாகக் கருதப்படும் தொல்காப்பியம் தொட்டு, இன்று வரையிலான அனைத்துப் படைப்புகளும் தமிழின் பண்பாட்டை ஏதோ ஒரு வகையில் உரமிட்டு, நீர் பாய்ச்சி, வேலியமைத்துக் காத்து வருவது நிதர்சனமான உண்மை.

இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழோடு வீறுநடை போட்டுப் பயணப்பட்ட தமிழ்மொழி, இன்று அறிவியல் தமிழ், கணினித்தமிழ் என்று ஐந்தமிழாக வளர்ந்து காலத்திற்கேற்ப தன்னைப் புதுப்பித்துக் கொண்டு, உலகமொழிகளுக்கு முன்னோடியாக, பன்மொழியாளர்கள் போற்றுகின்ற உயர்தனிச் செம்மொழியாக வலம் வந்து கொண்டிருக்கின்றது.நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி எந்த நாட்டுக்குச் சென்றாலும் அங்கெல்லாம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதைத் தவறாமல் முழங்கி, தமிழ்ச் சிந்தனையை இந்தியச் சிந்தனையாக மதித்து உலக மக்களிடம் பெருமிதத்தோடு எடுத்துக்கூறி வருகின்றார்.

இதுதான் தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கியத்துக்கும், தமிழ் மக்களுக்கும் கிடைத்த பெருமை. தமிழர்கள் உலகமெல்லாம் பரவி தங்களின் வாழ்வாதாரத்தோடு, தமிழ்ப் பண்பாட்டை தமிழை நவீனத் தொழில்நுட்பத்தோடு வளர்த்து வருகிறார்கள். மாணவர்களாகிய நீங்களும் நம் தாய்மொழியை மறந்துவிடாமல், பிற மொழிகளைக் கற்பதில் தயக்கம் காட்டக் கூடாது.

இன்று பல்வேறு படிப்புகளில் பட்டங்களை பெற்ற நீங்கள், தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் வாழ்ந்து, எல்லா வளங்களையும் பெற வேண்டும்.

அதே போல் நீங்கள் ஒரு படைப்பாளராக உருவாக வயதோ, குடும்பச் சூழ்நிலைகளோ, வறுமையோ ஒருபோதும் தடையாக இருக்கப் போவதில்லை. பட்டம் பெறுவதோடு நின்று விடாமல், உலகம் போற்றும் படைப்பாளர்களாக நீங்கள் உருவாக வேண்டும்,” என்று அவர் பேசினார்.

அமைச்சர்கள் புறக்கணிப்பு: தமிழ்ப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் பங்கேற்பார்கள் என அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருந்தது. ஆனால், நேற்று (அக்.19) சென்னையில் தூர்ஷர்ஷன் நிகழ்ச்சியில் தமிழ்தாய் வாழ்த்து பாடுவதில் ‘திராவிட நல் திருநாடும்’ என்ற வரி தவிர்க்கப்பட்டதால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற அந்த நிகழ்ச்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் பங்கேற்றதால், தமிழக அமைச்சர்கள் அந்த நிகழ்வில் பங்கேற்பதை புறக்கணித்ததாக தெரிகிறது. அதேசமயம், இன்றைய தமிழ்ப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் முழுமையாகப் பாடியது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *