“தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 75% இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றுவீர்” – அன்புமணி | anbumani ramadoss slams dmk govt

1373859
Spread the love

சென்னை: தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கு 75% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் அமைக்கப்படும் தனியார் தொழில் நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வழங்கும்படி அரசு கேட்டுக் கொண்டு வருவதாகவும், அதனால் அண்மையில் தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட வின்ஃபாஸ்ட் மின்சார மகிழுந்து தயாரிப்பு ஆலையில் தமிழ்நாட்டு இளைஞர்கள் 200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியிருக்கிறார். இது சாதனை அல்ல… துரோகம்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜா, வின்ஃபாஸ்ட் நிறுவனம் வெளிமாநில தொழிலாளர்களைத் தான் பணியமர்த்த விரும்பியதாகவும், அதன்பின் தமிழக அரசு தான் அந்த நிறுவனத்திடம் நீண்ட பேச்சு நடத்தி தமிழர்களை பணியமர்த்தும்படி கேட்டுக் கொண்டதகவும், அதனால் உள்ளூர் இளைஞர்கள் 200 பேருக்கு வேலை வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள வின்ஃபாஸ்ட் மகிழுந்து ஆலையில் 3500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது ஆயிரம் பேருக்கும் மேல் அந்த ஆலையில் பணி செய்து வருகின்றனர். அவர்களில் 200 தமிழர்களுக்கு வேலை என்பது வெறும் 20% மட்டும் தான். மண்ணின் மைந்தர்கள் அளித்த 400 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலையில் 200 தமிழர்களுக்கு மட்டுமே வேலை பெற்றுத் தரப்பட்டிருப்பது தமிழக அரசின் படுதோல்வியையே காட்டுகிறது.

2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் அமைக்கப்படும் தொழிற்சாலைகளில் 75% வேலைவாய்ப்பை தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்குவதைக் கட்டாயமாக்கி சட்டம் இயற்றப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருந்தால் வின்ஃபாஸ்ட் நிறுவனத்திடம் தமிழக அரசு கெஞ்சிக் கொண்டிருக்கத் தேவையில்லை.

வின்ஃபாஸ்ட் நிறுவனத்தில் இப்போது குறைந்தது 750 தமிழர்கள் பணி செய்து கொண்டிருப்பார்கள். தமிழகத்தில் உள்ள எல்லா தொழிற்சாலைகளிலும் லட்சக்கணக்கான தமிழர்களுக்கு பணி கிடைத்திருக்கும். ஆனால், அதை செய்யாமல் துரோகம் செய்த திமுக அரசு, 200 பேருக்கு கெஞ்சி வேலை வாங்கிக் கொடுத்ததை சாதனையாகப் பேசிக் கொண்டிருக்கிறது.

அதேபோல், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கையெழுத்திடப்பட்ட தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களில் 77% செயல்பாட்டுக்கு வந்து விட்டதாகவும், 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களில் 80% செயல்பாட்டுக்கு வந்து விட்டதாகவும் அமைச்சர் ராஜா கூறியுள்ளார். இந்த புள்ளிவிவரங்கள் அப்பட்டமான பொய்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, முந்தைய அதிமுக ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகளையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 50 தொழிற்சாலைகள் கூட திறக்கப்படவில்லை என்பது தான் உண்மை. முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை நியாயப்படுத்துவதற்காக பொய்களை கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு.

தொழில் முதலீடுகள் தொடர்பாக திமுக அரசு கூறும் புள்ளி விவரங்கள் உண்மை என்றால், 2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு கையெழுத்திடப்பட்ட 900-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் எத்தனை ஒப்பந்தங்களில் முதலீடுகள் பெறப்பட்டு ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

தொழிற்சாலைகளில் தமிழர்களுக்கு வேலை கிடைப்பதை உறுதி செய்யவும், தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *