சென்னை: ‘தமிழகம் என்றுமே ஆன்மிகம் தழைத்தோங்கும் புண்ணியபூமி என்பது மீண்டுமொருமுறை நிரூபணமாகியுள்ளது’ என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ராஜேந்திர சோழனின் வீர வரலாற்றின் ஆயிரமாவது வெற்றி விழாவில் பங்கேற்பதற்காகவும், தூத்துக்குடி நவீன விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும் 2 நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி 26-ம் தேதி இரவு தமிழகம் வந்தார்.
தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.4,900 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தார். தமிழகத்தின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தி, லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் வகையில் பல வளர்ச்சித் திட்டங்களை வழங்கிய மத்திய அரசுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.
பண்டைய பாரதத்தின் பொருளாதார வளர்ச்சியில் பெரும்பங்களித்த நமது பாண்டிய நாட்டு முத்துக்களின் பெருமை குறித்து தூத்துக்குடி மண்ணில் துல்லியமாக விவரித்த பிரதமரின் வரலாற்று ஞானம் கண்டு அதிசயித்துப் போனேன். தமிழ் மொழி மீதும், தமிழர் பண்பாடு, கலாச்சாரம் மீதும், தமிழ் மன்னர்கள் மீதும் அளவற்ற நேசம் கொண்ட ஒரு பிரதமர் இந்திய வரலாற்றிலேயே நரேந்திர மோடி ஒருவர்தான் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்.
கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்துக்கு வருகை தந்த முதல் இந்தியப் பிரதமர் என்ற வரலாற்று சிறப்பை பெற்றவர் மோடி. என்னதான் நமது மாநிலத்தை நாத்திகக் கரும்புகை சூழ்ந்து நம் இயல்பை மறைக்க முயன்றாலும், ‘தமிழகம் என்றுமே ஆன்மீகம் தழைத்தோங்கும் புண்ணிய பூமி’ என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்ட இந்நிகழ்வின் வெற்றி முழுமையும் பிரதமரையே சாரும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.