தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக பொறுப்பாளர்களை நியமித்தார் ஜெ.பி. நட்டா | BJP in-charges appointed for Tamil Nadu Assembly elections

1377727
Spread the love

புதுடெல்லி: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பொறுப்பாளர்களை பாஜக நியமித்துள்ளது. இதேபோல், பிஹார் மற்றும் மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பொறுப்பாளர்களையும் அக்கட்சி நியமித்துள்ளது.

இது தொடர்பாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பொறுப்பாளர் மற்றும் இணை பொறுப்பாளர்களை கட்சித் தலைவர் ஜெ.பி.நட்டா நியமித்துள்ளார். அதன்படி, பாஜக தேசிய துணைத் தலைவரும் மக்களவை உறுப்பினருமான பைஜயந்த் பாண்டா தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய கூட்டுறவுத்துறை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துறைகளின் இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது.” என தெரிவித்துள்ளார்.

இதேபோல், வரும் நவம்பரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள பிஹாருக்கான பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நியமிக்கப்பட்டுள்ளார். இணைப் பொறுப்பாளர்களாக, மத்திய நீர் சக்தித்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல், உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்குவங்க பாஜக தேர்தல் பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ், திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லப் தேப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *