திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் கட்டளையின் மடாதிபதிக்கு அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய நீதிபதி மறுப்பு | Judge refuses to quash notice sent to Thiruvarur Thyagaraja Swamy Temple Order

1363104
Spread the love

சென்னை: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் கட்டளைகளுக்கு பாத்தியப்பட்ட சொத்துகளை முறையாக நிர்வகிக்காதது ஏன்? என்பது குறித்து வேளாக்குறிச்சி மடாதிபதிக்கு இந்துசமய அறநிலையத்துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் பணிகளை மேற்கொள்ளவும், சொத்துகளைப் பராமரிக்கவும் 13 கட்டளைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் அபிஷேகக் கட்டளை மற்றும் அன்னதானக் கட்டளைகளுக்கு வேளாக்குறிச்சி மடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பரம்பரை அறங்காவலராக இருந்து வருகிறார்.

கடந்த 1937-ம் ஆண்டு இந்த இரு கட்டளைகளுக்குச் சொந்தமாக 3 ஆயிரத்து 900 ஏக்கர் நிலங்கள் இருந்த நிலையில் தற்போது ஆயிரத்து 300 ஏக்கர் நிலங்கள் மட்டுமே உள்ளன. எனவே, இந்த இரு கட்டளைகளையும் முறையாக நிர்வகிக்காதது குறித்து விளக்கமளிக்கக் கோரி வேளாக்குறிச்சி மடாதிபதிக்கு அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி வேளாக்குறிச்சி மடாதிபதி தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி,ஆர்,சண்முகநாதனும், அறநிலையத் துறை தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜனும் ஆஜராகி வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விளக்கம் கேட்டு அறநிலையத் துறை சார்பில் அனுப்பிய நோட்டீஸில் எந்த காரணமும் குறிப்பிடப்படவில்லை என்ற மடாதிபதி தரப்பு வாதத்தை ஏற்க முடியாது எனக்கூறி நோட்டீஸை ரத்து செய்ய மறுப்பு தெரிவி்த்து வழக்கை தள்ளுபடி செய்தார்.

மேலும், அறநிலையத் துறை அளித்த நோட்டீஸுக்கு மடாதிபதி தரப்பில் 4 வார காலத்தில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, மடாதிபதி தரப்பு விளக்கத்தை பரிசீலித்து, அவர்கள் தரப்பில் வாதங்களை முன்வைக்க போதிய அவகாசம் அளித்து சட்டப்படி இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *