உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், துணைவேந்தர்கள் மாநாட்டைக் கூட்ட ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அதிகாரமில்லை என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரும் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கான 3 நாள் மாநாடு நீலகிரியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என ஆர்.என். ரவி அறிவித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு அரசு நிறைவேற்றி தரும் மசோதாக்களுக்கு அங்கீகாரம் தராத ஆர்.என். ரவி தமிழ்நாடு அரசின் சட்டப் போராட்டத்தால் உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கு ஆளானார்.
தற்போது தமிழ்நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் வேந்தரை தமிழ்நாடு அரசே நியமிக்கும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கான 3 நாள் மாநாடு நீலகிரியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என ஆர்.என். ரவி அறிவித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.