சென்னை: தொழிலாளர்களின் நலனில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு முழு அக்கறை செலுத்தி வருவதால், தொழில் வளர்ச்சியில் தேசிய அளவில் தமிழகம் சாதனை படைத்து வருவதை நிதி ஆயோக் உள்ளிட்டவை பாராட்டியுள்ளதாக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல், கடந்த 3ஆண்டுகளில் பல்வேறு புதிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 20 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு பெற்ற 16லட்சத்து 499 உறுப்பினர்கள் புதிதாகபதிவு செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 18,46,945 தொழிலாளர்களுக்கு ரூ.1,551 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியத்தின் மூலம் 26,649 தொழிலாளர்களுக்கு ரூ.14.99 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 45 தொழில்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியம் ஓய்வூதியம்ரூ.1200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடைகள் மற்றும் நிறுவனங்களில் அனைத்துப் பணியாளர்களும் அமர்வதற்கு இருக்கை வசதி, சுகாதாரம், பாதுகாப்பான குடிநீர்,உணவருந்தும் அறை, முதலுதவிவசதிகளை உறுதி செய்ய சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. சமரசப் பேச்சுவார்த்தையின் மூலம்41 நிறுவனங்களில் நடைபெற்ற வேலை நிறுத்தங்கள் விலக்கிக்கொள்ளப்பட்டு, 13,825 தொழிலாளர்களின் உரிமை மற்றும் பணிகள் பாதுகாக்கப்பட்டன.
சுமுகமாகத் தீர்த்து வைக்கப்பட்ட 2,930 வழக்குகள் உள்ளிட்ட 7,145 தொழில் பிரச்சினைகளில் தீர்வு காணப்பட்டு பல்வேறு தொழிற்சாலைகளில் வேலை நிறுத்தங்கள் திரும்பப் பெறப்பட்டன. 669 கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு ரூ.1.71 கோடி உடனடிநிவாரணத் தொகையாக வழங்கப்பட்டது. 889 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, குழந்தைகள் நலக் குழுவினரிடமும், பெற்றோரிடமும் ஒப்படைக்கப்பட்டனர்.
தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் கீழ், 7,090 புதிய தொழிற்சாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 5,019 புதிய கட்டுமானத் தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வேலைவாய்ப்பு – பயிற்சி: தன்னார்வப் பயிலும் வட்டங்களில் ரூ.10.08 கோடி செலவில் 3 ஆண்டுகளில் நடத்திய பயிற்சிவகுப்புகளில் 5,138 பேர் தேர்ச்சிபெற்று அரசு மற்றும் பொதுத்துறையில் பணி வாய்ப்பு பெற்றுள்ளனர். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை 56,564 பொதுப் பயனாளிகளுக்கு ரூ.86.59 கோடியும், 14,420 மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கு ரூ.36.92 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 2,03,379 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
கடந்த 2023-ம் ஆண்டு அரசுஐடிஐ.க்களில் 81 சதவீதம் மாணவர்களும், தனியார் ஐடிஐ.க்களில் 62.38சதவீதம் மாணவர்களும் வளாக நேர்காணல் மூலம் பணி வாய்ப்பு பெற்றுள்ளனர். ரூ.2,877.43 கோடியில் 71 அரசு ஐடிஐ.க்களில் தொழில் 4.0 தரத்தில் தொழிற் பிரிவுகள் தொடங்கப்பட்டு, 5,140கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டு மாணவர்கள் பயிற்சி பெற்றுவருகின்றனர். ரூ.20 கோடி செலவில்ஐடிஐ.க்களுக்கு புதிய இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், ரூ.97.55 கோடியில் 11 புதிய ஐடிஐ.க்கள் தொடங்கப்பட்டு, கூடுதலாக 1,104 மாணவர்கள் சேர வழிவகை செய்யப்பட்டுள்ளது. 71,832 காப்பீட்டாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறுமாவட்டங்களில் புதியதாக 19 தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு தொழிலாளர்களின் நலனில் தமிழக அரசு முழு அக்கறை செலுத்தி வருவதால், தமிழகத்தில் தொழில்வளர்ச்சி தேசிய அளவில் சிறந்த முன்னேற்றங்களைக் கண்டு சாதனை படைத்து வருவதை மத்திய அரசின் நிதி ஆயோக் உட்பட பல்வேறு அமைப்புகள் பாராட்டி வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.