நடிகை கஸ்தூரிக்கு நவ.29-ம் தேதி வரை நீதிமன்ற காவல் | Actress Kasthuri remanded till November 29

1340065.jpg
Spread the love

சென்னை: தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் கடந்த 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு நடிகை கஸ்தூரி தெரிவித்த கருத்து தெலுங்கு மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து நடிகை கஸ்தூரி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். எனினும், நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் எழும்பூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், 4 சட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குபதிவு செய்தனர். மேலும், நாயுடு மகாஜன சங்கம் சார்பில் மதுரை திருநகர் போலீஸில் அளிக்கப்பட்ட புகாரில் தனியாக வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கஸ்தூரி தலைமறைவானார். அவர் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள பப்பலக்குடா பகுதியில் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களா வீட்டில் தங்கி இருக்கும் தகவல் சென்னை தனிப்படை போலீஸாருக்கு கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் அங்கு சென்று நடிகை கஸ்தூரியை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

பின்னர் அவரை சாலை மார்க்கமாக நேற்று சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர், எழும்பூர் 5-வது நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ரகுபதி ராஜா முன்னிலையில் ஆஜர் படுத்தினர். அப்போது அவரை வரும் 29-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் ரகுபதி ராஜா உத்தரவிட்டார். இதையடுத்து நடிகை கஸ்தூரியை போலீஸார் புழல் சிறையில் அடைத்தனர்.

நீதிபதியிடம் வேண்டுகோள்: முன்னதாக, மாஜிஸ்திரேடிடம், ‘நான் தனிமையில் வசித்து வருகிறேன். கணவர் ஆதரவு கிடையாது. தெலுங்கு பட சூட்டிங்குக்காக ஐதராபாத் சென்றிருந்தேன். நான் தலைமறைவாக வில்லை. என்னுடைய சென்னை வீட்டில் போலீஸார் சம்மன் ஒட்டிய தகவல் எனக்கு தெரியாது. என்னை சிறையில் அடைத்தால் எனது குழந்தை பரிதவிப்புக்கு ஆளாகும். எனவே என்னை சிறையில் அடைக்காமல், ஜாமீனில் விடுதலை செய்யுங்கள்’ என கஸ்தூரி வேண்டுகோள் வைத்தார். ஆனால் அவருடைய வேண்டு கோளை மாஜிஸ்திரேட் நிராகரித்தார். முன்னதாக, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு போலீஸார் அழைத்து வந்தபோது, ‘அரசியல் அராஜகம் ஒழியட்டும். நீதி வெல்லட்டும்’ என்று கஸ்தூரி கோஷம் எழுப்பினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *