நயினார் நகேந்திரனை வருங்கால துணை முதல்வரே என்று பாஜக மாவட்ட நிர்வாகி வரவேற்ற நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நகேந்திரன் பதற்றம் அடைந்தார்.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் நடைபெறவுள்ள ஆடித் திருவாதிரை விழாவில் பங்கேற்பதற்காக வரும் 27 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகை தரவுள்ளார்.
இதற்கான, மையக்குழு கூட்டம் நேற்று(ஜூலை 19) அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் பங்கேற்றார்.
விழாவுக்கான ஏற்பாடுகள், பக்தர்களின் வருகைக்காக செய்யப்பட்டுள்ள சிறப்பு வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அப்போது, இந்தக் கூட்டத்தில் வரவேற்புரை வழங்கிய அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் பரமேஸ்வரி, நயினார் நகேந்திரனை ‘துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்’ என்று குறிப்பிட்டு வரவேற்றார்.
பதற்றம் அடைந்த நயினார் நாகேந்திரன், அப்படி எல்லாம் அழைக்கக் கூடாது என்று கூட்ட மேடையிலேயே பரமேஸ்வரியை அறிவுறுத்தினார். இதனால் பாஜகவினர் மத்தியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
பின்னர், அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் பரமேஸ்வரி, ‘பாசமிகு அண்ணன் நயினார் நகேந்திரன்’ எனக் குறிப்பிட்டு வரவேற்றார்.
ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல என்றும் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பேசியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சொல்லப் போனால்… ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி!