சென்னை: அரசு நெல் கொள்முதலை விரைவு படுத்திட சிறப்பு கண்காணிப்பு குழு அமைத்திட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டாக அறிக்கை விடுத்துள்ளது.
இது குறித்த அறிக்கையில், “குறுவை சாகுபடி என்பது சுமார் 6 லட்சம் ஏக்கர் அளவில் நடந்துள்ளது. இது வழக்கமானதை விட கூடுதலாகும் என்பதை காலத்தில் அறிந்து தேக்கம் இல்லாமல் கொள்முதல் செய்வதற்கான திட்டம் இத்துறையிடம் இல்லை. நெருக்கடிகள் ஏற்பட்ட நிலையில் தான் தமிழக முதல்வர் 2-ம் தேதி வீடியோ கான்பரன்சில் கலந்து பேசி புதிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டிய நிலையில் உணவுத்துறை அமைச்சர் செயல்பாடு உள்ளது. இதன் பின்னும் நிலைமையில் முன்னேற்றம் இல்லை.
காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. தென்மேற்கு பருவமழை சீராக பொழிந்த நிலையிலும், உரிய முறையில் பருவ கால சூழல் உதவிய நிலையிலும்… வழக்கமான நிலையை விட குறுவை சாகுபடி பரப்பளவு கூடுதல் என்பது மட்டுமல்ல, மகசூலும் உயர்ந்திருக்கிறது.ஒரு சில பகுதிகளில் மட்டும் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.இப்படி உற்பத்தியான நெல்லை முழுமையாக, உரிய காலத்தில் கொள்முதல் செய்வதற்கான திட்டமிடுதல் இல்லாததே, இந்த தேக்க நிலைக்கான காரணம்.
இத்துறை அமைச்சரின் நேற்றைய அறிவிப்பில் கூட, கொள்முதல் செய்யப்பட்ட நெல் வெளியே அனுப்பப்பட்டது போக 12 டன் கொள்முதல் மையங்களில் இருப்பதாக கூறியிருக்கிறார். மகசூல் உயர்வுக்கு ஏற்ப, தேவையான இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. சணல் அனுப்பப்படுவதில்லை. கொள்முதல் செய்யப்பட்ட நெல் உடனுக்குடன் வெளியே அனுப்பாத நிலையில், மேலும் கொள்முதல் நிலையங்களில் தேங்கிய மூட்டைகள் மேலும் விவசாயிகள் விற்பனையும் கொண்டு வந்து வைத்துள்ள நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பல இடங்களில் விவசாயிகள் இதை காய வைக்க மறுபடியும் போராடுகிறார்கள். இந்த நிலைகளில் கூட ஈரப்பதம் மற்றும் நிறம் மாற்றம் என்பதில் கொள்முதலில் தளர்வு கொடுக்கப்படவில்லை. இப்படியான பல நிலைகளில் தான் அரசின் கொள்முதலில் விவசாயிகளுக்கு பாதிப்புகள் தொடர்கிறது.நாகப்பட்டினத்தில் ஒரு விவசாயி நெல் மூட்டைகளை விற்பனை செய்து தன் குடும்ப நிகழ்ச்சியை நடத்தலாம் என எண்ணியவர் அலைக்கழிக்கப்பட்டு அவதிப்பட்டு இருக்கிறார்.
தென்மேற்கு பருவமழை காலம் என்பதும் அதைத் தொடர்ந்து வரும் வடகிழக்கு பருவ காலமும் தமிழகத்தில் குறிப்பாக டெல்டாவில் காற்றின் ஈரப்பதம் என்பது சராசரி 23 சதத்துக்கும் மேலே கூடுதலாக இருக்கும். அந்த காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் அவ்வப்போது ஈரப்பதம் விலக்கை தளர்த்த கோறுவது என்பது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை. ஒன்றிய அரசின் உயர் அலுவலர்கள் வந்து பார்வையிட்டு அறிக்கை வருவதற்குள்,நெல் கொள்முதல் பருவமே முடிந்து விடுகிறது. எனவே தமிழக பருவ கால கொள்முதலுக்கான ஈரப்பதம் விலக்கை நிரந்தர உத்தரவாக பெற்றிட வேண்டும்.
மேலும் தற்காலிக சேமிப்பு கிடங்குகளை அவசரமாக ஏற்பாடு செய்து உடனுக்குடன் கொள்முதல் செய்த நெல்லை பாதுகாப்பாக சேமித்திட வேண்டும். தினசரி கொள்முதல் இலக்கு 1000 என்பதை 1500 சிப்பமாக உயர்த்திட வேண்டும்.அதற்கேற்ப கொள்முதல் அலுவலர்களை உயர்த்திட வேண்டும். கொள்முதல் தொழிலாளர்களுக்கு எடை கூலி குறைவு என்பதால் விவசாயிகள் உதவிடும் நிலை வந்தது.
தொடர் போராட்டங்களுக்கு பின் இவர்களுக்கான கூலியை உயர்த்திய பின்னும் இந்த நிலை தொடர்கிறது.எடை இழப்பு கொள்முதல் பணியாளர்கள் மீது சுமத்தப்படுவதால் அதற்கான இழப்பீடை இவர்களே செலுத்த வேண்டும் என்று நியாயம் கற்பிக்கப்படுகிறது. அறிவியல் பூர்வமாக இவைகளை சிந்தித்து தொழிலாளர் சங்கத்தினர் அமல்படுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.