பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவேண்டும்: டிடிவி தினகரன் | TTV Dhinakaran slams dmk govt

1324653.jpg
Spread the love

சென்னை: “சென்னையில் சேதமடைந்த சாலைகளிலும் பள்ளங்களிலும் தேங்கிநிற்கும் மழைநீரால் விபத்துக்கள் அதிகரித்துள்ளன. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் உயிரோடு விளையாடும் திமுக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை வேளச்சேரி சாலையில் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்த நபர், குண்டும் குழியுமான ஆலந்தூர் சுரங்கப்பாதையில் நிலை தடுமாறிய தனியார் நிறுவனத்தின் இளம்பெண் என கடந்த ஒருவாரத்தில் மட்டும் இரண்டு பேர் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதுமே சாலைப்பணிகளுக்காக தோண்டப்படும் பள்ளங்கள், முறையாக மூடப்படாததன் காரணமாக அதில் தேங்கி நிற்கும் மழைநீரில் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்துக்குள்ளாவதையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்கத் தவறிய தமிழக அரசின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

பிரதான சாலைகளில் ஏற்பட்டிருக்கும் பள்ளங்கள், மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்டு மூடப்படாமல் இருக்கும் குழிகள் என ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான பள்ளம், மேடுகளை கடந்து உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்ய வேண்டிய அவலநிலைக்கு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் தள்ளப்பட்டுள்ளனர்.

சென்னை போன்ற பெருநகரங்களில் சாலைகளில் காணப்படும் பள்ளங்களை சீரமைப்பதில் மாநகராட்சி நிர்வாகம் காட்டும் அலட்சியம் குறித்தும், ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் குறித்தும் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததே விபத்துக்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் சேதமடைந்திருக்கும் சாலைகளை உடனடியாக சீரமைப்பதோடு, வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாகவே அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *