பழநி முத்தமிழ் முருகன் மாநாடு | ‘முதல்வர் பங்கேற்காதது ஏன்?’ – அமைச்சர் சேகர் பாபு விளக்கம் | Devotees Thronging on the 2nd Day of International Muthamil Murugan Conference on Palani

1300640.jpg
Spread the love

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் நடைபெற்று வரும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் 2-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மாநாட்டை முன்னிட்டு நடைபெற்று வரும் கண்காட்சியை ஆகஸ்ட் 30ம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நேற்று (ஆக. 24) தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டின் 2-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இசை நிகழ்ச்சிகள், இறை வணக்கத்துடன் விழா தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் மொ.நா.பூங்கொடி வரவேற்றார். உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, திண்டுக்கல் எம்.பி.சச்சிதானந்தம், செந்தில்குமார் எம்எல்ஏ, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், கோவை கவுதார மடம் குமகுருபர சுவாமிகள், மொரீசியஸ் தமிழ்க் கோயில்கள் கூட்டிணைப்பு தலைவர் செங்கண் குமரா ஆகியோர் பேசினர். தொடர்ந்து, மாநாடு விழா மலர் வெளியிடப்பட்டது.

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக காலை முதலே வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். ஞாயிறு விடுமுறையையொட்டி மாநாட்டில் நடைபெறும் அறுபடை வீடுகள் கண்காட்சியை பார்ப்பதற்காக மக்கள் குடும்பம் குடும்பமாக திரண்டனர். 3-டி மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டியில் (VR) ஒளிபரப்பப்பட்ட முருகனின் பெருமைகளை பார்த்து வியந்தனர். கண்காட்சியில் இடம்பெற்றுள்ள அறுபடை வீடுகளின் மூலவர் சிலைகளுக்கு முன்பு நின்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அவரை செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

மாநாட்டிற்கு வந்த பக்தர்களுக்கு 8 இடங்களில் பல வகை உணவுகள் வழங்கப்பட்டன. பேருந்து நிலையம், வாகன நிறுத்துமிடத்தில் இருந்து மாற்றுத் திறனாளிகள், முதியவர்களை பேட்டரி கார்களில் அழைத்து வந்தனர். இன்றுடன் மாநாடு நிறைவடைய உள்ள நிலையில் கண்காட்சியை ஆகஸ்ட் 30ம் தேதி வரை காலை 8.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் பேர் வருகை: மாநாடு தொடர்பாக அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, செய்தியாளர்களிடம் கூறியதாவது: “அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முழு வெற்றி அடைந்துள்ளது. நேற்று மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்று உள்ளனர். நேற்று மட்டும் 1.25 லட்சம் பேருக்கு 3 வேளை உணவு வழங்கப்பட்டுள்ளது. 50,000 பக்தர்களுக்கு இலவசமாக பிரசாத பைகள் வழங்கப்பட்டுள்ளன. முதல்வர் ஸ்டாலின் பணிச்சுமை காரணமாக மாநாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை.”

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *