பாமகவுக்கும் விசிகவுக்கும் கொள்கை ஒன்றுதான்: அன்புமணி ராமதாஸ் | VCK and PMK are same says anbumani ramadoss

1311454.jpg
Spread the love

மதுரை: “அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னுக்கு வரவேண்டும் என்றுதான் ராமதாஸும், திருமாவளவனும் போராடிவருகிறார்கள். பாமகவுக்கும் விசிகவுக்கும் கொள்கை ஒன்றுதான் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரையில் இன்று பேசினார்.

மதுரை பழங்காநத்தத்தில் பாமக 36-வது ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் இன்று அக்கட்சியின் மதுரை மத்திய மாவட்டச் செயலாளர் சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் பாமக கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது: “தமிழ் வரலாறு என்றாலே மதுரை மண்தான். ஆட்சி அதிகாரத்திற்கு வராமலே, வருவதற்கு முன்பாகவே தமிழகத்தின் அத்தனை பிரச்சினைகளுக்கும் போராடி தீர்வு கண்டுவருகிறது பாமக. தமிழகத்தில் 57 ஆண்டுகளாக திராவிட கட்சிகளின் ஆட்சியில் தொழில்வளம் பெறவில்லை. ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதற்காக திராவிட கட்சிகள் சூழ்ச்சியிட்டு சமுதாய அடிப்படையில் மக்களை பிரித்து சண்டை மூட்டி அரசியல் பிழைப்பு செய்து கொண்டிருக்கின்றனர்.

அரசியல் சூழ்ச்சி செய்வதில் திமுக பிஎச்டி முடித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு எந்த சூழ்ச்சியும் செய்வார்கள். சமுதாயத்தினரை ஒன்று சேரவிடாமல் தடுப்பதுதான் திராவிட மாடல். தமிழகம் ஒட்டுமொத்த வளர்ச்சி பெற வேண்டும் என்பதுதான் பாமகவின் நோக்கம். திராவிட கட்சிகளுக்கு மாறி மாறி வாய்ப்பளித்து தமிழகம் சீரழிந்துள்ளது. பாமகவுக்கு ஒருமுறை கொடுத்துப்பாருங்கள். ஒருபைசா செலவின்றி பள்ளி, கல்லூரி கல்வி, தரமான சுகாதாரம் தருவோம். நல்ல அரசாங்கம் என்பது கல்வியில், சுகாதாரத்தில் முதலீடு செய்ய வேண்டும். ஆனால் திமுக அரசு சாராயத்தில் முதலீடு செய்கிறது.

தமிழக முதல்வர் 17 நாள் அமெரிக்க பயணம் முடிந்து. தமிழகத்திற்கு வந்தார். ரூ.7,600 கோடி ரூபாய் முதலீடு பெற்றுக்கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். தெலங்கானா முதல்வர் 5 நாள் பயணத்தில் 30 ஆயிரம் கோடி முதலீடு பெற்று வந்தார். மகாராஷ்டிரா முதல்வர் வெளிநாட்டில் 3 லட்சம் கோடி முதலீடு பெற்று வந்தார். முதலீடு என்றால் புரிந்துணர்வு ஒப்பந்தம். அதாவது கையழுத்து மட்டுமே போடுவார்கள். முதலீடு எப்போது செய்வார்கள், எப்படி செயவார்கள் என யாருக்கும் தெரியாது. ஆனால் 10 லட்சம் கோடி முதலீடு வந்துள்ளதாக தமிழக முதல்வர் பொய் சொல்கிறார். புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பதும் வெறும் கையெழுத்து மட்டுமே. இப்படி கணக்கு காட்டி விளம்பரப்படுத்தி ஏமாற்றுவதுதான் திமுகவின் வேலை. திமுகவின் 3 ஆண்டுகளில் ரூ.68 ஆயிரம் முதலீடு வந்துள்ளது. அதிமுகவின் 2 ஆண்டுகள் ஆட்சியோடு சேர்த்து 5 ஆண்டுகளில் மொத்த முதலீடாக 92 ஆயிரம் கோடி வந்துள்ளது. இதில் தென் தமிழகத்திற்கு ரூ.50 கோடி முதலீடு மட்டுமே வந்துள்ளது. இப்படி பல பொய்களை சொல்லி தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னுக்கு வரவேண்டும் என்றுதான் ராமதாஸும், திருமாவளவனும் போராடிவருகிறார்கள். . பாமகவுக்கும் விசிகவுக்கும் கொள்கை ஒன்றுதான். ராமதாஸ், திருமாவளவனின் எண்ணம் ஒன்றுதான். இருவரின் கருத்தும் ஒன்றுதான். ஆனால் திருமாவளவன் வேறு திசையில் சென்றுவிட்டார். அவர் தற்போது குழப்பத்தில் உள்ளார். கடந்த காலத்தை பற்றி பேசாமல், ஆட்சி அதிகாரம் எப்படி பெற வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டு்ம். ஒருவரையொருவர் குறைகளை சொல்வதை தவிர்க்க வேண்டும். திமுகவுக்கும் பட்டியலின சமுதாய மக்களுக்கும் சம்பந்தம் கிடையாது. திமுகவுக்கும் சமூக நீதிக்கும் சம்பந்தம் கிடையாது. திமுக அமைச்சரவையில் 34 அமைச்சர்கள் உள்ளனர். இதில் 34-வது அமைச்சராக தேவேந்திர வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த கயல்விழி, 33வது இடத்தில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர் மதிவேந்தன், 31வது இடத்தில் ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த கணேசன் அமைச்சராக உள்ளார். இதிலிருந்தே திமுகவின் வன்மம் தெரிகிறது. இதுதான் பட்டியலின மக்களுக்கு திமுக தரும் மரியாதையா?

ராமதாஸ் பின்னால் வாருங்கள். நிச்சயம் விடிவு கிடைக்கும். ஒட்டுமொத்த மக்களும் ஆதரவு கொடுங்கள். நமக்குள் பிரச்சினைகள் வேண்டாம். நாம் மோதினால் திமுகவுக்குத்தான் நன்மை. திமுகவின் சூழ்ச்சிக்கு இடம் கொடுக்க வேண்டாம். நிச்சயமாக ஒன்று சேரும் காலம் வரும். ஒன்று சேர்ந்தால்தான் ஆட்சி அதிகாரம் வரும். சமூக நீதியும் வரும். பாமகவை நம்பினால் கிடைக்கும். திமுகவை நம்பினால் கிடைக்காது. எல்லாருக்கும் முன்னேற்றம் வர வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கும் திமுகவுக்கு சமூக நீதியைப்பற்றி பேச தகுதி கிடையாது. தற்போது 69% இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் 69% இட ஒதுக்கீடு என்ற ரத்து என்று வரும் நாளில் திமுக அரசு கலைந்துபோகும். அப்போதுதான் மக்களின் போராட்டங்களைபற்றி திமுக அரசுக்கு தெரியும். தமிழக முதல்வர் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி சமூக நீதியை நிலைநாட்டுவதற்கு கூட்டணி கட்சிகள் அழுத்தம் கொடுங்கள். ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துங்கள். அப்போதுதான் 69% இட ஒதுக்கீட்டை காப்பாற்ற முடியும். சாதாரண ஊராட்சித்தலைவருக்கே ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த அதிகாரம் இருக்கும்போது தமிழக முதல்வருக்கு அதிகாரம் கிடையாதா. இதை தெரிந்துகொண்டே தெரியாததுபோல் இருக்கிறார் தமிழக முதல்வர்” இவ்வாறு அன்புமணி பேசினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *